ஹார்முஸ் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியா வந்தடைந்த 20,000 டன் LPG கப்பல்!
ஹார்முஸ் நீரிணை பதற்றம் நீடிக்கும் நிலையில், மார்ஷல் தீவுகள் கொடி ஏந்திய ‘சிமி’ சரக்குக் கப்பல் 20,000 டன் LPGயுடன் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது. மே 13 அன்று ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக கடந்த 11வது LPG கப்பலாக இது பதிவாகியுள்ளது. பல அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பால் இந்த பாதுகாப்பான பயணம் சாத்தியமானது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மார்ஷல் தீவுகளின் கொடியைச் சுமந்து செல்லும் 'Symi' என்ற சரக்குக் கப்பல், சுமார் 20,000 டன் திரவ பெட்ரோலிய வாயுவை (LPG) ஏற்றி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது . தகவல்களின்படி, இக்கப்பல் மே 13 அன்று, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்து, தற்போது நடைமுறையில் இருக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் கீழ், அந்தப் பாதையை வெற்றிகரமாகக் கடந்த 11-வது LPG சரக்குக் கப்பல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் வெளியுறவு, பாதுகாப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்களுக்கு இடையிலான நெருங்கிய ஒருங்கிணைப்பின் மூலமே, இந்தக் கப்பல்களின் பாதுகாப்பான இயக்கம் சாத்தியமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹார்முஸ் பகுதியில் விநியோகத் தடைகள் 75 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருவதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்புகள் கடந்த சில மாதங்களில் கணிசமாக குறைந்துள்ளது. ஈரான் அமெரிக்கா மோதல் தொடங்கிய பிப்ரவரி மாத இறுதியில் பதிவான 107 மில்லியன் பேரல்களிலிருந்து 91 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது.
தற்போது நாளொன்றுக்கு ஏறத்தாழ 5 மில்லியன் பேரல்கள் தேவைப்படும் நிலையில், இந்தியாவின் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய், சுமார் 18 நாட்களுக்கான தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி குறைந்தபோதிலும், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் இதுவரை பெரிய உற்பத்தி குறைப்புகள் இன்றி, சீரான சுத்திகரிப்பு வேலைகளை செய்து வருகிறது.
உலகளாவிய எண்ணெய் இருப்புகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச எரிசக்தி முகமை, உலகளாவிய எண்ணெய் கையிருப்பு மார்ச் மாதத்தில் 129 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் 117 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.

