கர்ப்பிணிக்கு ரயில் கழிவறையில் நடந்த பிரசவம்.. ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு..!
மேற்கு வங்கத்துக்கு பயணித்த கர்ப்பிணிக்கு ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கழிவறையில் பிரசவம் நேரிட்டதால், ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த கிஷான், அவரது மனைவி அம்ரிதா இருவரும் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்கத்துக்கு விரைவு ரயிலில் பயணித்தனர். ரயில் ஜோலார் பேட்டை நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்ரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கழிவறைக்குள் சென்றார். இதுகுறித்து அவரது கணவர் கிஷான் டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவித்தார். டிக்கெட் பரிசோதகரின் அறிவுறுத்தலின் பேரில், அந்த ரயில் பெட்டியில் பயணித்த பெண்கள் கழிவறைக்குள் சென்று அம்ரிதாவுக்கு உதவி செய்தனர். அப்போது அம்ரிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜோலார் பேட்டையில் 25 நிமிடம் வரை ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் நிலைய மேலாளரின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாயிலாக அம்ரிதா, அவரது கணவர், குழந்தை ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தாயும், சேயும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே நிர்வாகமும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையும் சேர்ந்து செய்த உதவியை, ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கழிவறையில் பிரசவமான சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.