டெல்லிக்குக் குறி.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்.. அச்சத்தில் பாஜக, ஆம் ஆத்மி!
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர், சமீபத்தில் பாங்கிபூர் (Bankipur) தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உற்சாகத்தில், தனது அமைப்பைப் பீகாருக்கு வெளியே விரிவுபடுத்தும் முதல் படியாக டெல்லியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பங்கிபூர் தொகுதியில்தான் அவர் வெற்றிபெற்றுள்ளார். இத்தொகுதி பாட்னா மேற்கு என்ற பெயரில் இருந்தபோதும் பின்னர் பங்கிபூர் என பெயர் மாற்றம் கண்டபின்னரும் தொடர்ந்து 9 முறை பாஜக வென்றிருந்தது. அதை, தற்போது தகர்த்து புதிய சகாப்தம் படைத்துள்ளார், பிரசாந்த் கிஷோர். இம்முடிவு, பீகார் அரசியலின் கணக்குகளை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதை அடுத்தகட்டமாக டெல்லிக்கு நீட்டித்துள்ளார் கிஷோர்.
டெல்லியில் தன் கட்சியின் செயல்பாடுகளை நிர்வகிக்கவும், முறையான கிளை அமைப்பை உருவாக்கவும் ஓர் 'இயக்கக் குழுவை' பிரசாந்த் கிஷோர் அறிவிக்க உள்ளார்.
டெல்லி அரசியலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய விருப்பத் தேர்வாக அமைய ஜன் சுராஜ் கட்சி முயற்சிக்கிறது. அங்கு நிலவும் காற்றுத் மாசுபாடு, யமுனை நதி தூய்மைப்படுத்துதல் மற்றும் உள்ளூர் நிர்வாகச் சிக்கல்களை மையப்படுத்தி பிரசாரம் செய்ய அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள லோக் கலா மஞ்ச் அல்லது ஜன்பத் பகுதியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஆயத்தமாகி வருகிறது. இதன்மூலம், டெல்லியில் பெருமளவில் வாழும் பூர்வாஞ்சல் (பீகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம்) வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவது அக்கட்சியின் முதன்மை இலக்காக உள்ளது.
குறிப்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தல் மற்றும் 2030 டெல்லி சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஜன் சுராஜ் கட்சி தயாராகி வருகிறது. இதற்காக, டெல்லியில் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை அமைப்பதற்கான பணிகளும் நிறைவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் இந்த நகர்வு, டெல்லியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மியிடம் சற்றே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

