2 மாநில வாக்காளர் பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர்... புதிய சர்ச்சை!
இந்திய தேர்தல் ஆணையம், மிகத்தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முக்கியக் காரணமாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுவது என்னவெனில், “சில வாக்காளர்கள் ஒரு இடத்தில் பதிவு செய்து, பின்னர் தங்கள் வசிப்பிடத்தை மாற்றினால், தங்கள் பெயர்களை அந்த வசிப்பிடத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் வேறு இடத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்கிறார்கள். இது வாக்காளர் பட்டியலில் மீண்டும் மீண்டும் உள்ளீடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்த வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலேயே செய்திகள் வெளியாகி வருகின்றன.
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து ஜன் சுராஜ் எனும் அரசியல் கட்சியின் தலைவராக மாறியிருக்கும் பிரசாந்த் கிஷோரின் பெயர், பிகார் மற்றும் மேற்கு வங்கம் என இரு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அந்த செய்தியின்படி, மேற்கு வங்கத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சட்டமன்ற தொகுதியான பபானிபூரில் கிஷோரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதாவது பிரசாந்த் கிஷோரின் முகவரியாக 121, காளிகட் சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில்தான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பிகாரில், கர்கஹார் சட்டமன்றத் தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இது சசாரம் நாடாளுமன்ற தொகுதியில் இருக்கிறது. அவரது வாக்குச் சாவடி ரோஹ்தாஸ் மாவட்டத்தின் கீழ் உள்ள கோனாரில் இருக்கிறது. கோனார் என்பது கிஷோரின் தந்தைவழி கிராமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு கிஷோர் பிகாரின் வாக்காளராகிவிட்டதாகவும், தனது மேற்கு வங்கத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்வதற்காக விண்ணப்பித்திருப்பதாகவும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1950 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 17 மற்றும் 18ன் படி, எந்தவொரு தனிநபரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளர் பட்டியலிலோ அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவ்வப்போது இதுமாதிரியான நிகழ்வுகள் கவனக்குறைவு காரணமாக நிகழும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

