’I-N-D-I-A கூட்டணி 2024 தேர்தலுடன் அவ்ளோதான்’ | பளிச்சென்று சொன்ன பிரகாஷ் காரத்..!
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்தன. ஆனாலும் ’I-N-D-I-A’ கூட்டணி என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகச் செயல்படாமல் 'ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு' என்கிற நிலையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, ’I-N-D-I-A’ கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. அதாவது I-N-D-I-A கூட்டணியில் இருந்தாலும், மாநிலங்களில் கட்சிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் மக்களவைத் தேர்தலில் I-N-D-I-A கூட்டணி தோல்வியுற்றது.
மறுபுறம், மக்களவைத் தேர்தலுக்குப் பின் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக வென்றுவருகிறது. இதனால், I-N-D-I-A கூட்டணியில் விரிசல்கள் ஆழமடையத் தொடங்கின. குறிப்பாக, டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தனியாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவின. இதைத் தொடர்ந்து ’I-N-D-I-A’ கூட்டணி பற்றிய செய்தி விஸ்வரூபமெடுத்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா என I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் பலரும் கூட்டணி தொடர்பாக அதிருப்தியான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ’I-N-D-I-A கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமானது‘ என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தும் இதே கருத்தை எதிரொலித்திருக்கிறார்.
மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில்தான் கூட்டணி குறித்து தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் மறைவுக்குப் பின் பிரகாஷ் காரத்தின் கைகள் கட்சியில் ஓங்கியிருக்கின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கிய மாநாட்டு தீர்மானத்தின் வரைவில், “மோடி தலைமையிலான பாஜக அரசை ஃபாசிச அரசு என்றோ, நியோ ஃபாசிச அரசு என்றோ வரையறுக்க முடியாது” என்று கூறப்பட்டிருந்தது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் மட்டுமல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாக விமர்சித்தது. இந்தப் பின்னணியில் காரத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது தேசிய அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.