வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்கள்... தமிழ்நாடும், பிற மாநிலங்களும் - ஓர் ஒப்பீடு

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் 2.2 விழுக்காடு மக்களே வசிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் எத்தனை விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்...
மாதிரிப்படம்
மாதிரிப்படம்pt web

ஒரு நபர் எதன் அடிப்படையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர் மாதம் ஆயிரத்து 407 ரூபாய்க்கு குறைவான வருமானம் பெற்றால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாக கணக்கிடப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் ஒருவரது மாத வருவாய் 972 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அவர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர் ஆவார். நாடு முழுவதும் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்களின் சராசரி விகிதம் 15 விழுக்காடு. சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து தப்பியுள்ளனர். ஐநா அளித்துள்ள தகவல்களின் படி, இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டது தெரியவந்துள்ளது.

நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது பீகார். அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது இடத்தில் உள்ள ஜார்க்கண்ட்டில் 35 விழுக்காடு பேரும், 3வது இடத்தில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 32.4 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 26.3 விழுக்காட்டினரும், மத்திய பிரதேசத்தில் 25.3 விழுக்காடு பேரும் வறுமையில் சிக்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வறுமை அதிகம் இல்லாத மாநிலங்களை எடுத்துக் கொண்டால், முதலிடத்தில் கேரளா உள்ளது. அங்கு மொத்த மக்கள் தொகையில் 0.7 விழுக்காடு பேர் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள கோவாவில் 1.9 விழுக்காடு பேரும், தமிழகத்தில் 2.2 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பது தெரியவந்துள்ளது. சிக்கிமில் 3.75 விழுக்காட்டினரும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 5.23 விழுக்காடு பேரும் வறுமைக் கோட்டுக்க கீழ் உள்ளவர்கள் ஆவர்.

இலவச உணவு தானியங்கள், வீடு கட்டும் வசதி, தொழில் பயிற்சி மற்றும் மருத்துவ காப்பீடு என பல்வேறு நலத்திட்டங்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களை மீட்க, தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com