இந்திய அரசியலமைப்பு தினம்: “ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும்”
அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாளான நவம்பர் 26 ஆம் தேதியை, இந்திய அரசியலமைப்புச் சட்ட தினமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடி வருகிறோம். அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட 75வது ஆண்டான இந்த ஆண்டும் இன்றைய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
அதன்படி தேசம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிற துறைகளின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றனர்.
அரசியலமைப்பு உறுதி மொழியை வாசித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் உரையாற்றி, சிறப்புத் தபால்தலை மற்றும் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
பின் பேசிய முத்தரசன், “அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடி கையில் வைத்து இருந்தாலும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது. அதேபோல் மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க செயல்படுகிறது” என தெரிவித்தார்.
அதேநேரம் தேசிய சட்ட தினத்தையொட்டி சிம்போசியம் நிகழ்ச்சி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றபின் பேசிய அவர், “மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது. மொழியை வைத்து பிரிவினையில் ஈடுபடுகின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு நமது கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள். தற்போது புதிய பாரதம் உருவாகி வருகிறது. இன்னும் சமூக நீதி தீண்டாமை உள்ளது. புதிய இந்தியாவை உருவாக்குவோம். சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு அரசியல் கட்சிக்கு சொந்தமானது இல்லை. அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. தீண்டாமை கொடுமை உள்ளது அது மிகவும் ஆபத்தானது.
2015 வரை சட்ட தினமாக கொண்டப்பட்டு வந்தது. மோடி பதவி ஏற்ற பின் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடக்கு தெற்கு, கிழக்கு மேற்கு என பிரிவினை இருந்தது அரசியல்வாதிகளால் அது செய்யப்பட்டது. இந்தியா என்பது ஒரே நாடு.
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என பேசினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன் எக்ஸ் தள பக்கத்தில், “நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும். ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்க அரசியலமைப்பு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அது எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக நம் நாடு இருக்கும்.
இந்த நாளில், அரசியலமைப்பின் யோசனையைப் பாதுகாத்த போராளிகள், தியாகிகள் மற்றும் அரசியலமைப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அஞ்சலி செலுத்துவோம்" என்றுள்ளார்.