யாத்திரை அரசியல்: இந்தியா முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முக்கிய ‘நடைபயணங்கள்’ என்னென்ன?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவிற்கு ஆதரவு திரட்டவும் மக்களிடம் தமிழ்நாடு பாஜகவை கொண்டு சேர்க்கும் பொருட்டும் என் மண் என் மக்கள் எனும் பெயரில் இன்று (ஜூலை 28) நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
நடைபயணங்கள்
நடைபயணங்கள்கோப்புப்படம்

இந்திய அரசியலுக்கும் நடைபயணங்களுக்குமான தொடர்பென்பது நீண்ட நெடியது. சொல்லப்போனால் இந்திய சுதந்திரத்துக்கு வழிவகுத்ததே கூட நடைபயணங்கள் தான்.

சுதந்திரத்துக்கு முன், காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளை சேர்ந்த பெருந்தலைவர்கள், பிற நாடுகளின் தலைவர்களிடமும் தங்கள் நாட்டின் பொதுமக்களிடமும் ஆதரவை பெறுவதற்காக நீண்ட நெடிய பல நடைபயணங்களை மேற்கொள்வார்கள். அன்று தொடங்கிய நடைபயணங்கள், இப்போது தேர்தல் அரசியல் களம் வரை நீண்டிருக்கிறது. அப்படியாக இந்திய தேசம் இதுவரை கண்ட சில முக்கிய நடைபயணங்களை இங்கே காண்போம்!

* இந்திய சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியின் வருகை போராட்டத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அதுவரை பொருளாதாரத்தில் உயர்ந்த இடங்களில் இருந்தவர்களே பெரும்பான்மையாக சுதந்திர போராட்ட களத்தில் போராடி வந்ததனர். அதை மாற்றியவர் காந்தி. அந்தவகையில் எளிய மக்களையும் போராட்ட களத்திற்கு அழைத்து வந்தார் அவர்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

மேலும் காங்கிரஸ், தேசத்தின் மூலை முடுக்குகளுகளில் இருக்கும் கிராமங்களில் கூட ஆதரவாளர்களை வைத்திருப்பதற்கு காந்தியின் பங்கு மிக முக்கியமானது. இந்தியா முழுவதும் நடந்தும் பிற போக்குவரத்து உதவிகளுடனும் காந்தி மேற்கொண்ட பயணங்கள் பாமர மக்களையும் அரசியலுக்கு கொண்டு வந்தன.

* தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பிற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட பயணங்கள்தான் இந்தி எதிர்ப்பை இன்னும் தீவிரமாக்கியது.

* திருச்செந்தூரில் அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரி சிவசுப்பிரமணிய பிள்ளை மரணம் தொடர்பாக 1982 பிப்ரவரி 15 ஆம் தேதி கலைஞர் மேற்கொண்ட நடைபயணமும் மிக முக்கியமானது. சுப்ரமணிய பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்போதைய அதிமுக அரசு கூறிய நிலையில் “கோவிலின் வைர வேல் காணாமல் போனது குறித்து சுப்ரமணியப் பிள்ளை கேள்வி எழுப்பிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்” என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ‘இவ்விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையையும் வெளியிடவில்லை. அதில் நடவடிக்கையும் எடுக்கவில்லை’ எனக் கூறி மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு கலைஞர் மேற்கொண்ட நடைபயணம் 8 நாட்கள் நடந்தது.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

இந்த பயணம் குறித்து சட்டப்பேரவையில் பகடி செய்த அதிமுக உறுப்பினர், கலைஞரின் திருச்செந்தூர் பயணத்தால் திருச்செந்தூரில் இருந்த முருகன் எம்.ஜி.ஆரின் ராமாபுரத்திற்கு வந்துவிட்டதாக கூறினார். அப்போது அதற்கு பதிலளித்த கலைஞர், “இதுவரை வைர வேல் தான் காணவில்லை என நினைத்தேன். முருகன் சிலையும் காணாமல் போனது இப்போது தான் தெரிகிறது” என கூறினார்.

* 1983 ஆம் ஆண்டு ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் கன்னியாகுமரியில் தனது நடைபயணத்தை தொடங்கி டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் நிறைவு செய்தார். பாரத யாத்திரை என பெயர் வைக்கப்பட்ட இந்த நடைபயணம் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி சுமார் 4,260 கிமீ தூரம் வரை நீண்டது. ஜனவரி 6 ஆம் தேதி இந்த நடைபயணத்தை தொடங்கிய சந்திரசேகர், 6 மாதங்கள் கழித்து 25 ஜுன் 1983 டெல்லியை சென்றடைந்தார். இந்த நடைபயணம் அவரது அரசியல் வாழ்க்கையில் முக முக்கியமானதாக அமைந்தது. அவர் இந்தியாவின் 8 ஆவது பிரதமராக 1990 ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர்
ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர்

* நடைபயணங்கள் என்றாலே ஆந்திரா எனும் அளவிற்கு பல்வேறு நடைபயணங்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் நடைபயணம் முலம் 1983 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றியிருந்தார் என்.டி.ராமாராவ்.

ராமாராவ்
ராமாராவ்

போலவே 2003 ஆம் ஆண்டு நடைபயணம் தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராசசேகர் ரெட்டி, 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றார்; 2013 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவும் நடைபயணம் மேற்கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்; 2017 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி நடைபயணத்தை மேற்கொண்டு 2019 ஆம் ஆண்டு வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

* 1990 ஆம் ஆண்டு எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை. அயோத்தி ராமர் கோவில் கட்டுவதை வலியுறுத்தி இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. குஜராத் சோநாத்தில் தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை பீகார் மாநிலத்தில் தடை செய்யப்பட்டு அத்வானியும் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வு, பாஜகவின் தேர்தல் அரசியலுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. 1984 ஆம் ஆண்டில் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக, இச்சம்பவத்துக்குப்பின் 1996 ஆம் ஆண்டு 161 இடங்களில் வெற்றி பெற்றது.

எல்.கே.அத்வாணி
எல்.கே.அத்வாணி

* 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து சட்டமன்றத்தை கலைக்க எதிர்க்கட்சிகள் கூறின. அது நடந்ததும்கூட. இதன் பின் குஜராத் கௌரவ யாத்திரையை மேற்கொண்ட மோடி, அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்று பெற்று முதலமைச்சரானார். அன்று முதல் 2014 ஆம் ஆண்டு பிரதமராகும் வரை குஜராத் முதலமைச்சராக அவர் நீடித்தார்.

* 1994 ஆம் ஆண்டு மதிமுகவை தொடங்கிய வைகோ முல்லைப் பெரியாறு அணை, நியூட்ரினோ பிரச்னை, பூரண மதுவிலக்கு என பல பிரச்னைகளை முன்னிறுத்தி தீர்வு கோரி பல்வேறு நடைபயணங்களை மேற்கொண்டவர். இந்த பயணங்கள் யாவும் தமிழகம் முழுவதும் மக்களிடையே மதிமுக சென்றடைந்தது. இதில் அதிமுக அரசுக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடைபயணம் மிக பிரமாண்டமானதாக இருந்தது. அதனாலேயே வைகோ, அரசியல் பார்வையாளர்களால் நடைபயணங்களின் நாயகன் என்றே பல நேரத்தில் அழைக்கப்பட்டார்.

* மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி மேற்கொண்ட நடைபயணங்கள் அவரது வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தன.

* கடந்த ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைக் கண்டது.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிந்த இந்த பயணம் 150 நாட்கள் 3500 கிமீ என திட்டமிடப்பட்டது. இந்த பயணத்திற்கு பின் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல அரசியல் தலைவர்களும் கையிலெடுத்த நடைபயண யுக்தியை, தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் பெயரில் எடுத்துள்ளார். ராமேஸ்வரத்தில் இந்த யாத்திரை தொடங்கப்பட உள்ளது. இன்று (ஜூலை 28) தொடங்கும் இந்த யாத்திரை 234 தொகுதிகளையும் கடக்க உள்ளது. யாத்திரையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 22 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 5 கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com