12,500 மடங்கு பாதரசம்! வெள்ளையாக அழகு க்ரீம்! சிறுமி உயிருக்கே வந்த ஆபத்து?
செய்தியாளர் - கார்த்திகேயன்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரீக்கோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் இருந்ததால், 2025-ஆம் ஆண்டு அன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, ஃபேர்னஸ் கிரீம் (Fairness Cream) ஒன்றை வாங்கியுள்ளார். தொடர்ந்து ஒரு வருடமாக, 3 பாட்டில்கள் வரை பயன்படுத்திய நிலையில், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உடல் வீக்கம், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதில், தீவிர சிறுநீரக நோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சிறுமி பயன்படுத்திய க்ரீம் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொதுவாக, அழகு க்ரீம்களில் 1 PPM என்ற அளவில் தான் பாதரசம் கலக்கப்பட வேண்டும். ஆனால், சிறுமி பயன்படுத்திய க்ரீமில், 12 ஆயிரத்து 500 PPM அளவுக்கு பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டது. பாதரசம் ஒரு நச்சுத்தன்மை கொண்ட பொருள். அது கலந்திருக்கும் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது, தோல் வழியாக உடலுக்குள் உறிஞ்சப்படும். இதன்காரணமாக, ரத்தத்தை வடிகட்டும் சிறுநீரகத்தின் நுண்ணிய பகுதிகள் சேதம் அடைவதோடு, சிறுநீர் வழியாக புரதம் வெளியேறும் அபாயமும் உள்ளது.
இப்படி நடந்தால், முகம், கால்கள் பகுதிகளில் கடுமையான வீக்கம் ஏற்படும். பாதிப்பு அதிகரித்தால், சிறுநீரகங்களே செயலிழக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இத்தகைய க்ரீமை பயன்படுத்தியதால், சிறுமியின் உடல்நலம் மிக மோசமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நவம்பர் 21-ம் தேதி அன்று செய்திகள் வெளியான நிலையில், கேரள அரசின் உத்தரவின்பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு பாதரச நச்சுத்தன்மையை குறைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக பாதிப்புகளுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்தாலும், முழுமையாக குணமடையவில்லை என்றும், படிப்பதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளையாக மாற வேண்டும் என்பது, இந்திய சமூகத்தின் ஒரு மோசமான பார்வைளில் ஒன்றாக உள்ளது.
அழகிற்கும், வெள்ளையாக இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், இந்த மோகம் இந்தியர்களை பல ஆண்டுகளாக ஆட்கொண்டிருக்கிறது. இந்த மோகத்தால், ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். அழகாக மாற நினைத்தால், மருத்துவர்களின் வழிகாட்டுதலின்பேரில், முறையான, அங்கீகரிக்கப்பட்ட க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக, விரைவாக ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விற்கப்படும் மருந்துகளை பயன்படுத்தினால், பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக மாறியுள்ளது.

