ஆக்ஷன் கிங்கின் அதிரடி புகார்! பயில்வானை தட்டித் தூக்கிய போலீஸ்! பரபரப்பு பின்னணி என்ன?
செய்தியாளர் - கார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அர்ஜூன். இவருக்கு, ஐஸ்வர்யா, அஞ்சனா என்று இரு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும், காமெடி நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும், கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணமானது. இந்நிலையில், இளைய மகளான அஞ்சனாவுக்கும், அமெரிக்காவை சேர்ந்த இசைய்யா நட்டார் என்பவருக்கும், சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், ஐஸ்வர்யா மட்டும் தனியாக கலந்துக் கொண்டிருந்தார். அவரது கணவர் உமாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று, பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இவ்வாறு கருத்து பரப்பிய ஒருசிலர், அளவுக்கு அதிகமான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நடிகர் அர்ஜூன், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், சைபர் க்ரைம் குற்றப்பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, நடிகர் அர்ஜுன் கடந்த 19-ஆம் தேதி அன்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், எனது இளைய மகளின் திருமணத்தில், தனது கணவர் இல்லாமல் மூத்த மகள் கலந்துக் கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சனம் முன்வைக்கிறார்கள். எனது மகள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறுகிறார்கள். எந்தவொரு ஆதாரமும் இன்றி, இழிவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். எனவே, எனது மகள் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், பெண் வன்கொடுமை தடுப்பு, தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனுக்கு, காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்பேரில், இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பயில்வான் ரங்கநாதனிடம், சைபர் க்ரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது எந்தவித ஆதாரமும் இன்றி, அவதூறுகளை பரப்பலாம் என்ற வகையில் தான், சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், பலரும் இந்த விமர்சனங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டாலும், பெருமளவில் புகார் அளிப்பதில்லை. தற்போது, அர்ஜூன் புகார் அளித்திருப்பது, முக்கியமான ஒரு அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

