தலாய் லாமா வாரிசு விவகாரம் | ”திபெத் விஷயத்தில் தலையிடாதீர்கள்” - இந்தியா பதிலுக்கு சீனா எதிர்ப்பு!
சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக திபெத்தின் புத்த மதத் தலைவரான 14வது தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனிடையே தலாய் லாமா வருகிற 6-ஆம் தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”தனது மறுபிறவியை 'காடன் போட்ராங்' அறக்கட்டளைதான் அடையாளம் கண்டு அங்கீகரிக்கும். தனக்குப் பின்னும் தனது அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும். இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை” என தெரிவித்திருந்தார்.
ஆனால், தலாய் லாமாவின் இந்த அறிவிப்பை சீனா நிராகரித்தது. சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, “தன்னுடைய வாரிசை புத்த மதத் தலைவர் தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும்” தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவ்விவகாரம் இருநாட்டு உறவு தரப்பில் எதிரொலித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், ”இந்தியா தனது வார்த்தைகளிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். திபெத் தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட சீனாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடுவதை நிறுத்துவதுடன், இந்தியா - சீனா இடையிலான உறவில் ஏற்படும் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதை நிறுத்த வேண்டும். தலாய் லாமாவின் சீன எதிர்ப்புக் கொள்கை குறித்து இந்தியா தெளிவுபடுத்துவதுடன், திபெத் தொடர்பான பிரச்னைகளில் தனது உறுதிமொழியை இந்தியா மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கிரண் ரிஜுஜு, ”நான் சீனாவின் கருத்துக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. நான் தலாய்லாமாவின் பக்தன். தனது வாரிசை தலாய் லாமாவே தேர்வு செய்வார் என அவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்திய அரசு சார்பாகவோ அல்லது சீன அரசின் பிரதிநிதியாகவோ நான் எதையும் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.