பிகாரில் பரப்புரையைத் தொடங்கும் பிரதமர் மோடி.. தேதியை அறிவித்த பாஜக!
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அக்டோபர் 24 அன்று தனது பரப்புரையை தொடங்குகிறார். பல இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவுள்ளார். முதல் கூட்டம் சமஸ்திபூரில் நடைபெறுகிறது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது பரப்புரையை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்க இருக்கிறார். இதன் மூலம் பாஜக கூட்டணி தனது தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்க உள்ளது.
பிரதமர் மோடியின் பரப்புரை நிகழ்வுகள் பாட்னா, முசாஃபர்பூர், கயா, பகல்பூர், சமஸ்திபூர், கிழக்கு மற்றும் மேற்கு சாம்பராண், சஹர்ஸா மற்றும் அராரியா போன்ற இடங்களில் நடைபெறும் என பாஜக தரப்பு தெரிவித்துள்ளது.
பிகாரில் பிரதமர் மோடியின் முதல் பொதுக்கூட்டம் என்பது சமஸ்திபூரில் உள்ள கர்புரிகிராமில் அக்டோபர் 24 தேதி நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பெகுசாரையில் மற்றொரு கூட்டம் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடியின் பரப்புரை தொடர்பாகப் பேசிய பிகார் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், பிகாருக்கு வரும் பிரதமர் மோடி, கர்பூரிகிராமில் உள்ள பாரத ரத்னா கர்ப்பூரி தாக்கூர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்றும் அதன்பின்பே தனது பரப்புரையைத் தொடங்குவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
முதல் பொதுக்கூட்டத்தில் பிகாரின் வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் விவசாய துறையில் புதிய முயற்சிகள் குறித்து வாக்காளர்களிடம் பேசுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பாஜக தலைமையிலான கூட்டணியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட உள்ளன.
பிகாரில் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாக பிரதமர் மோடி ஏற்கனவே பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கிழக்கு சாம்பராண் மாவட்டத்தில் ரூ. 7000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்ற இந்த 15 மாதங்களில் மட்டும் 7 முறை பிகாருக்கு அவர் வந்து சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறை பிகார் வந்து செல்லும்போதும் பல நலத்திட்டங்கள் பிகாரை வந்தடைவதால், மோடியின் வருகையை பிகார் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பார்க்கிறார்கள்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்திற்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நிறைவடைந்தது.