’இஸ்லாமியர்களுக்கு அஞ்சி நேரு நீக்கினார்..’ வந்தே மாதரம் பாடல் குறித்து மோடி குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் வந்தே மாதரம் பாடலை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார். மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில், நேரு இஸ்லாமியர்களுக்கு அஞ்சி பாடலின் ஒரு பகுதியை நீக்கியதாகவும், தற்போது ராகுல் காந்தி பங்கேற்கவில்லை எனவும் விமர்சித்தார்.
வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.
மோடி
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி மக்களவையில் சிறப்பு விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இஸ்லாமியர்களுக்கு அஞ்சி வந்தே மாதரம் பாடலின் ஒரு பகுதியை நேரு நீக்கியதாகவும், தற்போது இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை எனவும் விமர்சித்தார்.
வந்தே மாதரம் நமது சுதந்திர இயக்கத்தின் குரலாக மாறியதாகவும், அது ஆங்கிலேயர்களின்பிரிவினை முயற்சிக்கு எதிராக கற்பாறை போன்று உறுதியுடன் இருந்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
முன்னதாக மக்களவைக்குள் பிரதமர்மோடி நுழையும் போது அங்கிருந்தபாஜக மற்றும் கூட்டணி கட்சிஎம்பிக்கள், வந்தே மாதரம் என முழக்கமிட்டவாறு அவரை வரவேற்றனர்.
பிரியங்கா காந்தி
மேற்கு வங்க தேர்தலை கருத்தில் கொண்டு வந்தே மாதரம் பாடலை பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
மோடிக்கு பின் பேசிய பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ”மோடி நன்றாக பேசுகிறார், ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. வந்தே மாதரம் குறித்து பேசுவது முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி. நாட்டின் எதிர்காலம் குறித்து அரசிற்கு எந்த திட்டமும் இல்லை, கடந்த கால நிகழ்வுகள் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் தேர்தல் வருவதால் வந்தே மாதரத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார்” என விமர்சித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்
தேசிய கீதம் போன்று தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வந்தேமாதரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், தேசியகீதத்திற்கும், தேசிய பாடலுக்கும் சமஇடம் கொடுக்கப்பட வேண்டும். வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் கட்சி துண்டுதுண்டாக்க முடிவு செய்தது, இது அப்பாடலுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் மட்டுமின்றி, மாறாக பிறரை திருப்திப்படுத்தும் காங்கிரஸ்அரசியலின் தொடக்கம் என ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.

