பிரதமரின் 'Selfie Point' விவகாரம்: RTI-ன் தகவலால் பறந்த விமர்சனங்கள்; விதிகளை கடுமையாக்கிய ரயில்வே!

பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்டுகள் தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்த சூழலில் தகவல் வெளியிடுவதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது ரயில்வே துறை.
செல்ஃபி பாயிண்ட்
செல்ஃபி பாயிண்ட்pt web

மத்திய ரயில்வே துறை மும்பை, புஷாவல், நாக்பூர், புனே, சோலாபூர் என ஐந்து மண்டலங்களில் உள்ள கிட்டத்தட்ட 50 ரயில் நிலையங்களில் செல்ஃபி பாயிண்டுகளை வைத்திருந்தது. இந்த 50 ரயில் நிலையங்களில் தற்காலிக செல்ஃபி பாயிண்டுகள் 30 இடங்களிலும், நிரந்தர செல்ஃபி பாயிண்டுகள் 20 ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரத்தை சேர்ந்த அஜய் பாசுதேவ் போஸ், என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய ரயில்வே முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள 3D செல்ஃபி பூத்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அஜய் பாசுதேவ் விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில் மத்திய ரயில்வேயின் கீழ் நிறுவப்பட்ட செல்ஃபி பூத்களில், தற்காலிக பூத்களுக்கு தலா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், நிரந்தர செல்ஃபி பாயிண்டுகளுக்கு தலா 6 லட்சத்து 25 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்தான தகவல்கள் தெரியவந்த உடன், மக்களின் வரிப்பணத்தை பாஜக வீணடிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இது குறித்து கூறுகையில், “மோடியின் அரசாங்கம் சுய விளம்பரத்திற்கு எல்லையே இல்லை. வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. எதிர்க்கட்சி மாநிலங்களுக்கான நிதியும் நிலுவையில் உள்ளது. ஆனால் இது போன்ற தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவிட்டு வருகிறது. தனது தேர்தல் ஆதாயத்துக்கு மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறது” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் இது குறித்து கூறுகையில், “நேர்மையான வரி செலுத்துவோரின் பணத்தில் பிரதமரும், ஆளும் அரசும் சுயவிளம்பரம் செய்வது என்பது அப்பட்டமான துஷ்பிரயோகம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். செயல்பாட்டு காரணங்களுக்காகவே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “உண்மைக்கு அரசர் தண்டனையுடன் பரிசளிக்கிறார்” என தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், ஆர்.டி.ஐ.யின் கீழ் தகவல் வெளியிடுவதற்கான விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது. புதிய விதிகளின்படி, அனைத்து பதில்களும் மண்டல ரயில்வே பொது மேலாளர் அல்லது கோட்ட ரயில்வே மேலாளர்களால் அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம் பொதுமேலாளர்களுக்கு அனுப்பி இருந்த ஆலோசனையில், “மண்டல இரயில்வே மற்றும் பிற பிரிவுகளால் கையாளப்படும் ஆர்டிஐ விண்ணப்பங்களுக்கான பதில்களின் தரம் சமீபத்தில் மோசமடைந்துள்ளது” என இந்து நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து பதில்களும் மண்டல ரயில்வே பொது மேலாளர் அல்லது கோட்ட ரயில்வே மேலாளர்களால் அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆர்.டி.ஐ தகவல் வெளியானதற்கும், விதிகள் கடுமையாக்கப்பட்டதற்கும் தொடர்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com