யோகா என்றால் சேர்ப்பது என்று பொருள் - சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை!
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் யோகா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தவகையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இது கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை சுமார் 6 மணி அளவில் இந்த யோகா பயிற்சிகள் தொடங்கின. இதில் சுமார் 5.5 லட்சல் பேர் வரை யோக செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பிரதமர் மோடி இந்த நிகழ்வில் யோகாசனம் செய்தார்.
இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
“சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலுமிருந்து இங்கு வரும் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, முழு உலகமும் யோகா செய்து வருகிறது. யோகா என்றால் சேர்ப்பது என்று பொருள். யோகா முழு உலகத்தையும் எவ்வாறு இணைத்துள்ளது என்பதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் நாளாக சர்வதேச யோகா தினம் இருக்கட்டும். யோகா என்பது வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டுமல்லாமல், உலகளாவிய கூட்டாண்மை மற்றும் ஒற்றுமைக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் ஏற்கப்பட வேண்டும். யோகாவை கூட்டு நல்வாழ்வுக்கான பங்களிப்பாக ஒவ்வொரு தேசமும் ஏற்க வேண்டும்.
உடல் பருமன் என்பது இன்று சர்வதேச அளவில் பெரிய சவாலாக உள்ளது. யோகா மூலம் 10 சதவீத உடல் பருமனைக் குறைக்கலாம் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நான் சொல்லி இருந்தேன். இந்த சவாலை மக்கள் ஏற்க வேண்டுமென இந்நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 2014-ல் ‘ஜூன் 21’-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவித்தது. அதன் பின்னர் இந்த 11 ஆண்டுகளில் 174 நாடுகளில் யோகா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படி உலகத்தை யோகா இணைத்துள்ளது.
யோகாவின் பயணத்தைப் பார்க்கும்போது, அது எனக்கு பல விஷயங்களை நினைவூட்டுகிறது. ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா ஒரு தீர்மானத்தை முன்வைத்த நாள். மிகக் குறுகிய காலத்தில், உலகின் 175 நாடுகள் நம் நாட்டிற்கு ஆதரவாக நின்றன. இந்த ஆதரவு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல” என்று பேசினார்.