உயரப் போகுதா பெட்ரொல் விலை? மக்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் ஷாக்!
செய்தியாளர் - M. மீரா
இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. இதனால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து, பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் தாக்கமாக, கடந்த மே மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் மொத்தமாக 7.5% உயர்த்தப்பட்டன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்பாக, நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலையை ஓரளவு உயர்த்த அரசு திட்டமிடலாம் என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம், ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கணிப்பை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது
தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைவதற்கு முன்பு விலையை உயர்த்துவதற்கான கடைசி வாய்ப்பாக நவம்பர் மாதம் இருக்கலாம் என ஆக்ஸ்போர்டு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், 2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சில்லறைப் பணவீக்கம் 6.2% ஆகவும், 2027 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 6.5% ஆகவும் அதிகரிக்கலாம் என ஆக்ஸ்போர்டு கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.4% ஆக இருக்கும் என ஆக்ஸ்போர்டு கணித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் 5.2% கணிப்பைவிட அதிகமாகும். நவம்பரில் எரிபொருள் விலை உயர்த்தப்படாவிட்டாலும், பணவீக்கம் அதிகமாகவே இருக்கலாம் என ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது. இதனால், டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரிசர்வ் வங்கி தலா 25 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 2026 செப்டம்பரில் இந்தியாவின் பணவீக்கம் 5.54% ஆக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால் பொருளாதாரத்திற்கு சவாலாக இருக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

