“2 மணி நேரத்துக்கு முன்புதான் அந்த விமானத்தில் பயணித்தேன்” - பயணி வெளியிட்ட பரபரப்பு வீடியோக்கள்!
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட விமானமானத்தில் இருந்து 1.39 மணிக்கு ஆபத்து காலத்தில் வரும் அவசர அழைப்பு வந்ததாகவும், பின்னர் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என 242 பேர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 130 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது குடியிருப்புப் பகுதி என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணி ஒருவர் உயிர்பிழைத்துள்ளதாக அகமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தகவல் தெரிவித்துள்ளார். விமானத்தில் 11 A இருக்கையில் பயணித்த பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் விஸ்வாஸ்குமார்.
2 மணி நேரத்திற்கு முன்புதான் பயணித்தேன்
இந்நிலையில் ஆகாஷ் வட்சா எனும் பயணர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்திலிருந்து புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் நான் அந்த விமானத்தில் பயணித்தேன். இந்த விமானத்தில் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்தேன். விமானத்தில் அசாதாரண விஷயங்களைக் கவனித்தேன். இதை ஏர் இந்தியாவிற்கு தெரிவிக்க ஒரு வீடியோவையும் உருவாக்கினேன்” எனத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றும் பயணிகள் காற்றுக்காக தினசரி பத்திரிகைகளை வைத்து விசிறிக்கொண்டுள்ளார் என்றும் அந்தப்பயணி தெரிவிக்கிறார். விமானத்திலிருந்த டிவி திரை உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் சிலவையும் சரியாக வேலை செய்யவில்லை என்று அந்த பயணி வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கின்றார். ஆகாஷ் வட்சா பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.