madhya pradesh
madhya pradeshpt web

“பர்வேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும். அவர் ஒரு பண்டிட்” - பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை

சக மனிதன் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பாதிக்கப்பட்ட நபர், குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவிக்க கோரிக்கை வைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் தான் குற்றம் செய்துவிட்டோம் என்பதை உணர்ந்துவிட்டதால், அவரை விடுவித்துவிடலாம் என பழங்குடி இனத்தைச் சேர்ந்த தஷ்மத் ரவாத் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Urinate Issue - Madhya Pradesh
Urinate Issue - Madhya PradeshTwitter

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின நபர் மீது சிகரெட் புகைத்தபடி நின்று கொண்டிருந்த நபர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் சித்தி மாவட்டத்தை சேர்ந்த 36 வயதான தஷ்மத் ராவத் இதில் பாதிக்கப்பட்டவர் என்றும் பிரவேஷ் சுக்லா என்ற நபர் இச்செயலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிரவேஷ் சுக்லா அப்பகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்று எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் கேதார் சுக்லாவோ, தொகுதியை சேர்ந்த நபராகவே பிரவேஷ் சுக்லாவை தெரியும் என்றும் அவருக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அதில் உள்ள குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) கீழ் நடவடிக்கை எடுக்கவும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Madhya Pradesh CM
Madhya Pradesh CMTwitter

மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பாதிக்கப்பட்ட நபரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து அவரது கால்களைக் கழுவி அவரிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் முதலமைச்சரின் இந்த நடவடிக்கை வெறும் நாடகம் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

சித்தி போலீசார், பிரவேஷ் சுக்லாவுக்கு எதிராக ஐபிசி பிரிவு 294 மற்றும் 504, எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து அவரை கடந்த புதன் கிழமை கைது செய்தனர். இந்நிலையில் பிரவேஷ் சுக்லாவால் பாதிக்கப்பட்ட நபர், பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து அவர் , “தவறு நடந்துவிட்டது தான். நான் அரசாங்கத்திடம் அவரை விடுவிக்க கேட்டுக்கொள்கிறேன். பர்வேஷ் சுக்லா தன் தவறை உணர்ந்துவிட்டார். அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட்” என தெரிவித்துள்ளார். முன்னதாக மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்ததுடன், அவரது வீடு கட்டுவதற்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com