ஆந்திரா| பார்சலில் வந்த ஆணின் சடலம்.. அதிர்ச்சியடைந்த பெண்! நடந்தது என்ன?
பார்சலில் பாம்பு வந்த செய்தியை கேட்டிருப்போம்.. பார்சலில் BOMB இருந்த செய்திகளைக்கூட அறிந்திருப்போம். ஆனால், ஆந்திராவில் பெண்ணின் வீட்டுக்கு வந்த விபரீத பார்சல், அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பார்சலில் அப்படி என்ன வந்தது? என்பதை காண்போம்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்தவர் துளசி. 13 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கணவர் காணாமல் போன நிலையில், தனியாக வசித்து வருகிறார். அவருக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்கிய நிலையில், அதில் வீடு கட்டும் பணியில் துளசி இறங்கியுள்ளார். வீடுகட்டுவதற்காக சில அமைப்புகளை துளசி நாடிய நிலையில், வீட்டுக்கு தேவையான டைல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, மின்சாதனப் பொருட்களை அவர் கோரியிருந்த நிலையில், அவரது வீட்டிற்கு மீண்டும் ஒரு பார்சல் வந்தது.
அதில் மின்சாதனப் பொருட்கள் இருக்கும் என நினைத்து பிரித்து பார்த்த துளசிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. பாதி வெட்டப்பட்ட நிலையில் ரத்தம் தொய்ந்த ஆணின் உடல், பார்சலில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் துளசி. சடலத்துடன் வந்த பார்சலில் ஒன்றரை கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் கடிதமும் இருந்துள்ளது.
தகவல் அறிந்த காவல்துறையினர் உடலையும், மிரட்டல் கடிதத்தையும் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த கொரியர் நிறுவனத்தின் பெயரும் பார்சலில் இல்லாத நிலையில், அதனை கொண்டு வந்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.