இந்தியாவில் பாகிஸ்தான் உளவாளிகள்! எதற்காக இந்த ரகசிய ஆபரேஷன்?
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, இந்தியாவில் இருந்த உளவாளிகள் மற்றும் ‘ஸ்லீப்பர் செல்களை’ பாகிஸ்தான் பயன்படுத்தி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் எங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய முயன்றதாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜீதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இச்செயல் குறித்து, இந்திய விமானப்படையின் மேற்கு விமானப்படைப் பிரிவுக்கு தலைமை வகித்தவரான மிஸ்ரா, ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதனைத் தற்போது தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லையில் இருந்து 200 கி.மீ. தொலைவுக்குள் நெருங்குவதைத் தடுப்பதில் . S-400 அமைப்பு, முக்கியப் பங்காற்றியதாக அவர் கூறினார்.
மேலும், S-400 அமைப்புகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பாகிஸ்தான் அனைத்து வழிகளிலும் முயன்றதாக மிஸ்ரா தெரிவித்தார். பிற நாடுகளின் செயற்கைக்கோள் உதவியையும் பாகிஸ்தான் பெற்றதாக அவர் கூறினார். அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் விமானங்கள் வானில் பறந்தபோது S-400 மூலம் தாக்கப்பட்டதாகவும், இதனால் அந்த அமைப்பு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
S-400 அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் சந்தேகித்ததால், ஆதம்பூர் விமானப்படைத் தளமும் தாக்குதலுக்கு உள்ளானதாக மிஸ்ரா தெரிவித்தார். மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ஏவிய ஏராளமான ட்ரோன்களை எதிர்கொள்ளவும் S-400 பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். முன்னதாக, இந்தியா S-400 அமைப்பின் நான்காவது படைப்பிரிவை இந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றது.
இந்தியாவின் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படும் S-400, உலகின் அதிநவீன, தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் நீண்டதூர ஏவுகணை அமைப்புகளில் ஒன்றாக இருக்கிறது. போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள், க்ரூஸ் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, கண்காணித்து, தாக்கும் திறன் கொண்டது.
பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனில் முக்கியமான முன்னேற்றம் என மிஸ்ரா குறிப்பிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் வெற்றிகரமான உள்நாட்டு ஏவுகணைகளில் ஒன்றான பிரம்மோஸை வாங்குவதற்கு, பல நாடுகள் ஆர்வம் காட்டியதையும் அவர் குறிப்பிட்டார்.
பிரம்மோஸ் போன்ற அதிவேக ஏவுகணையை இடைமறிப்பது மிகவும் கடினம் என்றும் மிஸ்ரா கூறினார். சுமார் 14 முதல் 15 கி.மீ. உயரத்துக்கு சென்று, அதிவேகமாக பறக்கும் இந்த ஏவுகணை, இலக்கை நோக்கி இறங்கும்போது மணிக்கு சுமார் 3 மாக் வேகத்தை எட்டும் என்பதால், அதை இடைமறிப்பது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் S-400 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்தினை முறியடிக்க பாகிஸ்தான், உளவாளிகளையும் ‘ஸ்லீப்பர் செல்களை' பயன்படுத்திய தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.

