’சீமாவை அனுப்பாவிட்டால்..’ எல்லை கடந்த காதல் விவகாரத்தில் மும்பை போலீஸுக்கு மிரட்டல்!

பாகிஸ்தான் பெண்ணை, திரும்ப நாட்டுக்கு அனுப்பாவிட்டால், மும்பை தாக்குதல் போன்று மீண்டும் நடைபெறும் என மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
Seema Haider
Seema HaiderPTI

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சீமா ஹைதர். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இவர், தொடர்ந்து PUBG விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில், PUBG மூலம் சீமா ஹைதருக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் என்ற 23 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் அவர்கள் இருவருக்குள்ளும் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சச்சினைக் காண முடிவு செய்து கடந்த மார்ச் மாதம் நேபால் வந்துள்ளார் சீமா. அங்கு இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக சச்சினுடன் இருக்க முடிவு செய்திருக்கிறார் சீமா.

சச்சின், சீமா
சச்சின், சீமாட்விட்டர்

இதற்காக பாகிஸ்தானில் இருக்கும் தன் பூர்விக நிலத்தை விற்றுவிட்டு, 4 குழந்தைகளுடன் நேபாளத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கே புறப்பட்டு வந்தார். இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து காதலர் சச்சினுடன் வசித்துவந்த சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, "நான் சச்சினை காதலிக்கிறேன். எனக்கு பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை. சவுதியில் இருக்கும் என் கணவருடன் இணைந்து வாழ விருப்பமுமில்லை. இந்தியாவிலேயே தங்களைச் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்" என்று சீமா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சீமா, சச்சினுடன் இணைந்து வாடகை வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சச்சின், சீமா
சச்சின், சீமாட்விட்டர்

இந்த நிலையில், ’சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பவில்லை என்றால் 26/11 மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்த நேரிடும்’ என மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போலீசின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட அந்த நபர். ’சீமா ஹைதர் பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை என்றால் மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படும். இந்த தாக்குதலுக்கு உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா அரசுகளே காரணம்’ என அந்த நபர் உருது மொழியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மிரட்டல் தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ’இது ஒரு புரளி அழைப்பு. இதுகுறித்து நாங்கள் கூடுதல் விவரங்களைச் சேகரித்து வருகிறோம்’ என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த யாரேனும் இந்த மிரட்டல் விடுத்தனரா என்பது குறித்தும் தீவிரமாய் விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலுக்குப் பிறகு சீமா ஹைதர், அவரது காதலர் சச்சின் மற்றும் 4 குழந்தைகள் ஆகியோர் போலீஸ் காவலில் இருப்பதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பை தாக்குதல்
மும்பை தாக்குதல்twitter

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம் என 12 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 166 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com