பஹல்காம் தீவிரவாத தாக்குதல் | பின்னணியில் முன்னாள் பாக். ராணுவ வீரர்? விசாரணையில் அம்பலம்
பஹல்காம் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் புலனாய்வு அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் அவரது பின்னணி குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தினர். இதில் ஒரே நேரத்தில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தாக்குதலின் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகளை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் வீடுகளை தகர்த்தது.. தேடுதல் வேட்டை.. என்று நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தாக்குதல் நடந்த மறுநாளே தாக்குதலை நடத்தியவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியாகின. அங்கு சுடப்பட்டவர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வரைபடம் உருவாக்கப்பட்டு வெளியானது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படுபவர்களை புலனாய்வு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், பஹல்காம் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஹாஷிம் மூசா குறித்து பகீர் தகவல்கள் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையில் பணியாற்றிய ஹாஷிம் மூசா, ராணுவத்தில் பணியாற்றியபோதே, தடை செய்யப்பட்ட அந்நாட்டின் Lashkar-e-Taiba அமைப்பில் இயங்கியதாக கூறப்படுகிறது. அவரது தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் அவரை வெளியேற்றி இருக்கிறது. இதனால் சுதந்திரமாக Lashkar-e-Taiba அமைப்பில் இணைந்து ஹாஷிம் மூசா பணியாற்றியதாகவும், பிறகுதான் இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 2023ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவுக்குள் நுழைந்த ஹாஷிம் மூசா, பெயரை மாற்றிக்கொண்டு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் வசித்து வந்திருக்கிறார். அங்கு இருந்தபடி, தாக்குதல்களில் பங்கேற்றிருக்கிறார் ஹாஷிம் மூசா. பஹல்காம் உட்பட ஏற்கனவே நடந்தேறிய 3 தீவிரவாத தாக்குதலில் இவர் ஈடுபட்டதாக தெரிகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியது, Lashkar-e-Taiba அமைப்பில் இணைந்து இயங்கியது போன்ற அனுபவத்தால், அதிபயங்கர ஆயுதங்களை கையாளும் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் ஹாஷிம் மூசா.
Lashkar-e-Taiba தீவிரவாத அமைப்போடு நின்றுவிடாமல், ஒரே நேரத்தில் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் ஹாஷிம் மூசா தொடர்பில் இருந்திருக்கலாம் என்றும் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்கும் ஒரு படி மேலாக, பாகிஸ்தான் ராணுவமே தீவிரவாத அமைப்புகளுக்கு ஹாஷிம் மூசாவை தத்துக்கொடுத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு, Lashkar-e-Taibaவின் துணை அமைப்பான பெர்சிஸ்டண்ட் ஃப்ரொண்ட் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஹாஷிம் மூசாவின் பின்னணி தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.