கடந்த இரண்டு மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 48 லட்சத்துக்கும் அதிகமான ட்விட்கள் பகிரப்பட்டுள்ளதாக ட்விட்டர் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2019 மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். பின் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதை அடுத்து தெலங்கானாவுக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசத்தில் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் அடுத்தமாதம் ராஜஸ்தான், தெலங்கானாவுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பாஜக, காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கின. இன்றைய டிஜிட்டல் உலகில் தேர்தல் பிரசாரம் டிஜிட்டல் சந்தைகளிலும் பெருகிவிட்டது. சமூக வலைதளங்களில் அனைத்து கட்சிகளும் தங்களது தொண்டர்களுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 48 லட்சத்துக்கும் அதிகமான ட்விட்கள் பகிரப்பட்டுள்ளதாக ட்விட்டர் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் இந்தியாவின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிமா காவ்ல், ''5 மாநில சட்டப்பேரவை தேர்தல் எதிரொலியாக ட்விட்டரில் 4 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கட்சியினரும் தொண்டர்களும் ட்விட்டரை அரசியல் தொடர்பான விவாதகளமாக பயன்படுத்துகின்றனர். இளைஞர்களுக்கும், கருத்து தெரிவிப்பவர்களும் ட்விட்டரை அதிகம் பயன்படுத்துகின்றனர்'' என்று தெரிவித்தார்
#AssemblyElections2018 என்ற ஹேஸ்டேக்கிற்கு சிறப்பு எமோஜியையும் வெளியிட்டு 5 மாநில தேர்தல் தொடர்பான கருத்து பகிர்வுகளை ஊக்குவித்து வருகிறது ட்விட்டர் இந்தியா. இந்த சிறப்பு எமோஜி, டிசம்பர் 23வரை பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

