மாற்றி அனுப்பப்பட்ட லேப்டாப்
மாற்றி அனுப்பப்பட்ட லேப்டாப்pt web

ஆர்டர் செய்ததோ 1.13 லட்சம் ரூபாய் லேப்டாப்.. வந்ததோ தூசுபடிந்த லேப்டாப்! வாடிக்கையாளர் ஷாக் புகார்!

ஆன்லைன் தளத்தில் புதிய மடிக்கணினி ஆர்டர் செய்த நிலையில் பழைய லேப்டாப் டெலிவரி ஆனதால் பயனர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Published on

ஆன்லைன் வர்த்தகம் எந்த அளவிற்கு பொருட்கள் வாங்குவதை எளிமையானதாக ஆக்கியுள்ளதோ அதே அளவிற்கு ஆர்டர் செய்த பொருள் கைக்கு வந்து சேரும்வரை பயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருள்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பது வாடிக்கையாக உள்ளது. இதையொட்டி பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாருக்கும், செய்திகளுக்கும் அடுத்தே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மன்னிப்பு கோரி அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குகின்றன.

ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருள் கிடைப்பது என்னவோ எதிர்பாரா தவறுகள் என சொல்லலாம். ஆனால் ஐபோன் ஆர்டர் செய்தால் செங்கல் வருவது போன்றவை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையே.

இந்நிலையில், இப்போது குடியரசு தின விற்பனையில் ஃப்லிப்கார்ட் தளத்தில் ரூ.1.13 லட்சத்தில் அசுஸ் மடிக்கணினி ஆர்டர் செய்த முகர்ஜி என்பவருக்கு உபயோகப்படுத்தியதைப் போன்ற மடிக்கணினி வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், தான் ஆர்டர் செய்திருந்த வண்ணத்தில் அது இல்லை என்பதும் மடிக்கணினியில் தூசு படிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மடிக்கணினியை அன்பாக்சிங் செய்யும் வீடியோவையும் முகர்ஜி வெளியிட்டுள்ளார்., “இந்த குடியரசு தின விற்பனையில் நான் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் இருந்து புத்தம் புதிய அசுஸ் லேப்டாப்பை ஆர்டர் செய்தேன், மேலும் பழைய மற்றும் கைவிடப்பட்ட லேப்டாப்பைப் பெற்றேன். ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களில் இருந்து ஆர்டர் செய்யும் தயாரிப்புகளை ஒருபோதும் நம்ப வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு ஃப்லிப் கார்ட் நிறுவனம் பதிலளித்திருந்தது. அதில், நீங்கள் ஆர்டர் செய்ததைத் தவிர வேறு எதையும் நீங்கள் பெறுவதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம். மேலும் இந்த நிகழ்விற்கு மிகவும் வருந்துகிறோம். இதை சரிப்படுத்துவதற்கு நீங்கள் எங்களை நம்பலாம்” என தெரிவித்துள்ளது. மேலும் அதுகுறித்தான ஆர்டர் விவரங்களையும் கேட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com