நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. இத்தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாம் நாள் விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார்.
மூன்றாம் நாளான இன்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி வருகிறார்.
அதில், ”21 ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. இது இந்தியாவிற்கான பொன்னான வாய்ப்பு. நாங்கள் இப்பொழுது செய்யும் பணி அடுத்த 1000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும். எங்களுக்கு இந்திய இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. அதனால் தான் இளைஞர்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.
அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமைமிக்க இந்தியாவை கட்டமைக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இதன் மீது எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வந்துள்ளோம். ஊழல் இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.
உலக அளவில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறை பல்வேறு சாதனைகளை புரியும் வகையில், இளைஞர்களுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். அந்நிய நேரடி முதலீடு ஏற்றுமதி என பல துறைகளில் பல சாதனைகளை முறியடித்துள்ளோம். எங்களது இந்த சாதனைகள் தான் எதிர்க்கட்சிகளுக்கு வேதனையை கொடுத்திருக்கிறது. இந்தியா நிலைத்தன்மையுடன் இருக்கிறதே என சிலருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி பேரை நாங்கள் வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம். ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் நான்கு லட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். தூய்மை இந்தியா திட்டத்தை உலக சுகாதார அமைப்பே பாராட்டி உள்ளது. நாடு வளர்ச்சி அடைவது எதிர்க்கட்சிகளுக்கு பதற்றத்தை கொடுக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை இல்லை. மக்களின் நம்பிக்கை மீது நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆஸ்ட்ரிச் மனநிலையில்தான் இருக்கிறார்கள்” என்றார்.