சட்டப்பேரவையில் மதுபோதையில் இருந்தாரா பஞ்சாப் CM..? எதிர்கட்சியினர் வெளிநடப்பால் அதிர்ச்சி!
பஞ்சாப் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பகவந்த் மான் மதுபோதையில் இருந்ததாக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கடுமையாக குற்றம் சாட்டியதால் அவையில் பரபரப்பு வெடித்தது. மானுக்கு உடனடி மதுபான பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக எதிர்த்தனர். இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட, அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
செய்தியாளர் - விக்னேஷ்
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மதுபோதையில் இருந்தார் எனவும், உடனடியாக மது சோதனை நடத்தவேண்டும் எனவும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரதாப் சிங் பாஜ்வா வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்ததால், பஞ்சாப் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
முன்பு பகவந்த் மான் மக்களவை உறுப்பினராக இருந்தபோது, இதே போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. பகவந்த் மான் சட்டப்பேரவையில் பேசியபோது வாய்குழறியதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரதாப் சிங் பாஜ்வா, முதலமைச்சர் பகவந்த் மான் அவைக்கு மது அருந்திவிட்டு வந்ததாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதனால் அவையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களுக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக தலைவர்களும் முதலமைச்சர் போதையில் இருந்ததாக குற்றம் சாட்டினர்.
முதலமைச்சர் மது அருந்தியிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று பிரதாப் சிங் பாஜ்வா சபாநாயகரிடம் வலியுறுத்தினார். "முதலமைச்சர் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர், அவர் போதையில் அவைக்கு வருவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்" என்று அவர் சாடினார்.
இந்தக் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும், முதலமைச்சரின் பிம்பத்தைக் கெடுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் கூறி முழக்கமிட்டனர்.
இருப்பினும், ஆம் ஆத்மி தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு வன்மையாக மறுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸால் ஆக்கபூர்வமான விவாதங்களை எதிர்கொள்ள முடியாமல், தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் அமளி காரணமாக சட்டப்பேரவை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன. இந்தப் புகார் தொடர்பாக சபாநாயகர் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பஞ்சாப் அரசியலில் நிலவுகிறது. மதுபானப் பரிசோதனை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை சபாநாயகர் குல்த்தார் சிங் சந்த்வான் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

