‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்வதேச நாடுகளுக்கு இந்தியா விளக்கம்; சர்வதேச தலைவர்கள் சொல்வதென்ன?
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து அமெரிக்கா, ரஷ்யா, யுஏஇ, பிரிட்டன் பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கமளித்துள்ளது. உளவு அமைப்புகள் அளித்த விவரங்கள் அடிப்படையில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருநாடுகளும் உச்சபட்ச பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென ஐநா பொதுச்செயலாளர் குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் ராணுவ நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்க வேண்டுமெனவும் குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியான தீர்வை எட்டுவதை நோக்கி தொடர்ந்து பாடுபடுவேன்” என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ரூபியோவிற்கு விளக்கமளித்துள்ளதாக அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துணைப் பிரதமர் ஷேக் அப்துல்லா இப்ன் சயீத் அல் நஹ்யான் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கவும், பதற்றங்களைத் தணிக்கவும், பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விஷயங்களைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளார்.