இனி 100% PF பணத்தை எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழு, அதன் கூட்டத்தின் போது, பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான விதிகளை எளிமைப்படுத்தியுள்ளது.. அதில் ஊழியர் மற்றும் நிறுவனப் பங்களிப்பு உட்பட 100% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தொழிலாளர் அமைச்சக அறிக்கையின்படி, இபிஎஃப் திட்டத்தில் உள்ள 13 சிக்கலான விதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் அத்தியாவசியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்),வீட்டுத் தேவைகள் மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு உட்பட, 100% வரை பணத்தை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் கல்வி மற்றும் திருமணத்திற்கான பணம் எடுக்கும் வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன. கல்விக்கு 10 முறை மற்றும் திருமணத்திற்கு 5 முறை வரை பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு முன்பு திருமணம் மற்றும் கல்விக்கு மொத்தம் 3 முறை மட்டுமே பகுதியளவு பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், அனைத்து பகுதியளவு பணம் எடுப்பதற்கும் குறைந்தபட்ச சேவை காலம் 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நெருக்கடி சூழல்களில் பணம் எடுப்பதற்கான காரணங்களை இனி சந்தாதாரர்கள் விளக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கு முன்பு அதற்கான காரணமாக வேலை இல்லை, அல்லது பேரிடர் போன்ற காரணங்களை தெரிவிக்க வேண்டியிருந்தது.
மேலும் உறுப்பினரின் கணக்கு பங்களிப்புகளில் 25 சதவீதம் குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் ஒதுக்கப்படும். இது உறுப்பினர்கள் இபிஎஃப்ஓ வழங்கும் 8.25% வட்டி விகிதத்தைப் பெறவும், ஓய்வூதியத்திற்காக ஒரு பெரிய நிதியை உருவாக்கவும் உதவும். மேலும், இந்த மாற்றம் பணத்தை எடுப்பதை எளிதாக்குவதோடு, ஓய்வூதியத்திற்கான நிதியை உறுப்பினர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. அத்துடன் ஆவணங்கள் எதுவும் தேவையில்லாமல், 100% தானியங்கி முறையில் பகுதிப் பணம் எடுப்பதற்கு இது எளிமையாக வழிவகுக்கிறது.
அதேபோல் தற்போது இபிஎஃப்-இல் உள்ள நிலுவைத் தொகையில் 100 சதவீதம் வரை திரும்பப்பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ-இல் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வுகாண 'விஸ்வாஸ்' என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஸ்வாஸ் திட்டம் என்பது வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறைக்கு இடையேயான வரி தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நேரடி வரித் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம், நீண்டகால வரி வழக்குகளைக் குறைப்பது, வரி செலுத்துவோரின் சுமையைக் குறைப்பது மற்றும் அரசுக்கு உரிய நேரத்தில் வருவாய் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.
இபிஎஃப்-ன் முதிர்வு பெறாத இறுதி செட்டில்மென்ட் எடுப்பதற்கான காலக்கெடு 2 மாதத்திலிருந்து 12 மாதங்களாகவும் ஓய்வூதிய இறுதி செட்டில்மென்ட் 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இபிஎஃப்-ஓவின் கடனை 5 ஆண்டுகளுக்கு முறையாக நிர்வகிக்க 4 நிதி மேலாளர்களை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சர் மாண்டவியா இது குறித்து கூறுகையில், சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான டிஜிட்டல் முயற்சிகளையும் தொடங்கி வைத்தார், இது உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எளிமையாக பணத்தை எடுக்க வழிச்செய்யும் என்றார்..