ரேகா குப்தா, கெஜ்ரிவால் மட்டுமல்ல.. அத்வானி, மனிஷ் சிசோடியாவுக்கும் SIR நோட்டீஸ்!
டெல்லியில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நிரப்பப்பட்ட படிவங்களில் லாஜிக்கல் மிஸ்டேக் இருப்பதாக 33 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பல மூத்த அரசு அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தசூழலில் இந்தப்பட்டியலில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆகியோருக்கும் இதேபோன்ற முரண்பாடுகள் தொடர்பாக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேகா குப்தாவின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து. அவரது பெயர் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள ஷாலிமார் பாக் தொகுதியின் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா, மகன் புல்கித் மற்றும் பெற்றோர் ஆகிய 5 பேரும் ‘முந்தைய SIR- உடன் இணைக்கப்படாத வாக்காளர்கள்’ பிரிவில் நோட்டீஸ் பெற்றுள்ளனர். தேவையான ஆவணங்களுடன் பதிலளிக்க வேண்டும் என்றும், நோட்டீஸ்கள் மீதான நடவடிக்கை அக்டோபர் 29க்குள் முடிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தசூழலில் தான் இந்தப்பட்டியலில் இவர்களை தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி மற்றும் தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் அவர்கள் குடும்பத்தினரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

