\
LPG
LPGANI

சிலிண்டர் மானியம் கிடைக்காது.. சீக்கிரம் இத பண்ணிடுங்க.. இன்னும் 10 நாள் தான் இருக்கு!

வீட்டு பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கு, அக்டோபர் 1-ஆம் தேதி முதல், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.
Published on
Summary

மத்திய அரசு அறிவிப்பின்படி, உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட மானிய எல்பிஜி சிலிண்டர் பயனாளர்கள் அனைவரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் Biometric Aadhaar Authentication முடிக்க வேண்டும். அக்டோபர் 1 முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருவதால், ஆதார் இணைப்பு செய்யாதவர்களுக்கு இனி மானியம் வழங்கப்படாது. உண்மையான ஏழை பயனாளர்களுக்கே மானியம் சென்றடைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

மத்திய அரசு சார்பில் விநியோகிக்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் கிட்டதட்ட 950 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்த ஏழை எளிய மக்களுக்கு, மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒருசிலர் பல்வேறு கேஸ் இணைப்புகளை ஒரே சமயத்தில் பெற்றுக் கொண்டு, கூடுதலான மானியங்களை பெற்று வருவதாக, குற்றச்சாட்டு எழுந்திருந்தது. எனவே, இதனை சரி செய்வதற்காக, மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, வீட்டு உபயோக சிலிண்டர் நுகர்வோருக்கு அக்டோபர் 1-ஆம் தேதி முதல், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. மானிய விலையில் சிலிண்டர் பெறும் நுகர்வோர்கள் அனைவரும், LPG இணைப்புக்கான Biometric Aadhaar Authentication-ஐ முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அதனை செய்யவில்லை என்றால், இனி மானியம் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யவே இந்த புதிய நடைமுறை கொண்ட வரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LPG
LPGANI

செப்டம்பர் 19-ஆம் தேதி வரையில், நாடு முழுவதும் 27.43 கோடி இணைப்புகள், இந்த ஆதார் இணைப்பை சரிபார்த்து முடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்த எல்.பி.ஜி. நுகர்வோரில் இது 89.9 சதவீதம் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம், சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வரும் ஊழியர், ஆதார் இணைப்பை சரிபார்க்க முடியும். அல்லது சிலிண்டர் விநியோகிக்கும் அலுவலகத்திற்கு நேரில் சென்றும், ஆதார் இணைப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலமும், இந்த ஆதார் இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆதார் இணைப்பை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு வழிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, விரைவில் ஆதாரை இணைத்தால் தான், இனி சிலிண்டருக்கு மானியம் கிடைக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com