இனி PIN Code கிடையாது.. இனி உங்க வீட்டுக்கு தனி Digi-PIN! தபால் துறையில் அதிரடி மாற்றம்!
உங்க ஊரோட PIN Code என்னங்க?" என்று இனி யாரும் யாரிடமும் கேட்க மாட்டார்கள். PIN Code எல்லாம் பழைய கதையாகிவிட்டது. இப்போதைய நவீன டிஜிட்டல் காலத்துக்கு ஏற்ப PIN Code, Digi-PIN ஆக மாறுகிறது. இதில் உங்கள் வீட்டுக்கு கூட தனி PIN நம்பர் உருவாக்கிக்கொள்ளலாம் என்றால், சூப்பர் தானே? அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் - இந்த செய்தித் தொகுப்பில்.
இந்தியாவில் தற்போது கடிதங்கள், பார்சல்கள் மற்றும் அஞ்சல் சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் 6 இலக்க பின்கோடு முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, துல்லியமான இடத்தை அடையாளம் காணும் வகையில் 10 இலக்க டிஜிட்டல் பின்கோடு எனப்படும் புதிய முகவரி குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பின்கோடு முறையில், ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது அஞ்சல் நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு முகவரி அடையாளம் காணப்படுகிறது. இதனால் ஒரே பகுதியைச் சேர்ந்த பல்வேறு இடங்களுக்கு ஒரே பின்கோடு இருக்கக்கூடிய நிலை உள்ளது. புதிய டிஜிட்டல் பின்கோடு முறை இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய குறியீடு புவியியல் அடிப்படையில் உருவாக்கப்படும். குறிப்பிட்ட இடத்தின் துல்லியமான அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் பின்கோடு நிர்ணயிக்கப்படும். இதற்காக ஒரு பகுதி சிறிய கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு இடத்துக்கும் தனித்துவமான குறியீடு வழங்கப்படுகிறது.
சுமார் 4 மீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய பகுதிக்கும் தனி அடையாளம் கிடைக்கும் வகையில் இந்த முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இடங்களின் குறியீடுகளில் முதல் சில எழுத்துகள் அல்லது எண்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், முழுமையான குறியீடு ஒவ்வொரு இடத்தையும் தனித்துவமாக அடையாளம் காணும்.
இந்த டிஜிட்டல் பின்கோடு முறை மூலம், அஞ்சல் மற்றும் பார்சல் விநியோகத்தை மேலும் துல்லியமாகவும் வேகமாகவும் மேற்கொள்ள முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சரியான முகவரியை கண்டறிவதில் சிரமம் ஏற்படும் பகுதிகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், டிஜிட்டல் பின்கோடு முறையைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட இடத்தின் அடையாளத்தை இணையதளம் அல்லது டிஜிட்டல் சேவைகள் மூலம் எளிதாகப் பெற முடியும். இந்திய அஞ்சல் துறையின் இணையவழி சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கான டிஜிட்டல் பின்கோடை உருவாக்கிப் பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை, இந்தியாவின் பாரம்பரிய 6 இலக்க பின்கோடு முறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

