பாஜக கூட்டணியில் இணைகிறார் நிதிஷ்குமார்: மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு

பாஜக கூட்டணியில் இணைகிறார் நிதிஷ்குமார்: மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு
பாஜக கூட்டணியில் இணைகிறார் நிதிஷ்குமார்: மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு அங்கம் வகித்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தற்போது மீண்டும் இணைய உள்ளது. மோடியின் மத்திய அமைச்சரவையிலும் அந்தக் கட்சிக்கு இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது 

நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் பாட்னாவில், நிதிஷ்குமார் இல்லத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக கூட்டணியில், ஐக்கிய ஜனதாதளம் இணைவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நிதிஷ்குமார் பாட்னாவில் வெளியிட்டார். மேலும் மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு இடமளிக்கவும் பாஜக உறுதியளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கூட்டத்திற்கு முன்பாக ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய செயலாளர் கேசி தியாகி, இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடனாக மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக கூட்டணியில் இணைய கட்சி நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறுவதுதான் என்று கூறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மகா கூட்டணி அமைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றன. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாக கூறப்பட்டது.

பீகாரின் துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி மீது உள்ள ஊழல் குற்றம்சாட்டுகளுக்காக அவரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 26-ம் தேதி நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பிறகு பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார். தேஜஸ்வியின் துணை முதல்வர் பதவி பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடிக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர் சரத் யாதவ் தலைமையிலும் ஒரு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு சரத் யாதவ், பாஜகவுடன் கைகோர்த்து பீகார் மாநில மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்து விட்டதாகவும், கட்சியின் உண்மையான தொண்டர்கள் தன்னுடன் இருப்பதாகவும், தான் மெகா கூட்டணியின் பக்கம்தான் உள்ளேன் என்றும் கூறினார். இதனால் ஐக்கிய ஜனதாதளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com