ரூ.100 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய நீதா அம்பானி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கிய நீதா அம்பானி
உலகப் பணக்கார்களில் ஒருவரும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரருமாக இருப்பவர், முகேஷ் அம்பானி. மேலும் இவர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவரது மனைவி நீதா அம்பானி. இவர் மும்பை இந்தியன்ஸ் (கிரிக்கெட்) அணியின் இணை உரிமையாளர், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார். ’சும்மா பேர கேட்டாலே அதிருதுள்ள’ என ரஜினி பேசும் டயலாக்கைப் போன்றே, அம்பானி குடும்பத்தின் பேரைக் கேட்டாலே அனைத்துக்கும் பிரம்மாண்டம் என்றே பதில் வரும்.
ஆம், அவர்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார்கள் வரை என அனைத்தும் ஆடம்பரமாகவும், சொகுசு நிறைந்ததாகவும் இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற அவர்களுடைய இளைய திருமணம்கூட மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிலையில், நீதா அம்பானி ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. நீதா அம்பானி, வாங்கியிருக்கும் இந்த Audi A9 Chameleon (ஆடி A9 பச்சோந்தி) காரின் தனித்துவமான அம்சங்கள் மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள், ஆட்டோமொபைல் உலகில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஆடி A9 பச்சோந்தியின் கார் பற்றிய விவரங்கள்
ஆடி A9 பச்சோந்தி என்பது மிகச் சிறந்ததை விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப இயந்திரமாகும். இந்த கார் அடுத்த தலைமுறை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடி A9 பச்சோந்தி காரில் 4.0 லிட்டர் V8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 600 குதிரைத்திறனை வெளிப்படுத்துகிறது. அதாவது, இந்த கார், மணிக்கு 250 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது. மேலும், பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் மூன்றரை வினாடிகளில் எட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த Audi A9 Chameleon கார், நிறத்தை மாற்றும் திறன்களைக் கொண்டது. இதன் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பது இந்த காரின் சிறப்பு அம்சமாகும்.
அதாவது, அதன் பச்சோந்தி போன்று நிறம் மாற்றும் வண்ணப்பூச்சுதான். வெளிச்சம் மற்றும் கோணங்களைப் பொறுத்து நிறத்தை மாற்றும். இது காருக்கு உலகளவில் அதிக ஈர்ப்பை அளிக்கிறது. இதன் வடிவமைப்பு எதிர்காலத்தைக் குறிப்பதாகவும், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற செயல்திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வண்ணப்பூச்சு வேலை மின்சாரத்தால் செய்யப்பட்டுள்ளது. இது சுமார் ஐந்து மீட்டர் நீளம் கொண்டது. தனித்துவமான இரண்டு-கதவு உள்ளமைவுடன் உள்ளது. நீதா அம்பானி வாங்கியுள்ள Audi A9 Chameleon கார், உலகிலேயே 11 பேரிடம் மட்டும்தான் உள்ளது. இது மிகவும் பிரத்யேகமான வாகனமாகக் கருதப்படுகிறது. உலகளவில் விற்கப்படும் ஒரு சிலவற்றில் ஒன்றாகும்.
நீதா அம்பானியிடம் உள்ள பிறகார்கள்
ஆடி A9 பச்சோந்தியைத் தவிர, நீதா அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் VIII EWB, மெர்சிடிஸ்-மேபேக் S600 கார்டு, ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட், பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மற்றும் BMW 7 சீரிஸ் 760Li செக்யூரிட்டி உள்ளிட்ட பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.