பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பெண் தொழிலாளர்கள் பலி; கேரளாவில் சோகம்- ராகுல், பினராய் இரங்கல்

கேரளாவில் பள்ளத்தில் கவிழ்ந்து ஜீப் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு ராகுல்காந்தி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
kerala
keralapt web

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தேயிலை தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு, மானந்தவாடி பகுதியின் கம்பமலை உள்ளிட்ட பகுதிகளில் 1960 களில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி, தலபுழா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து விட்டு 12 பேர் ஜீப்பில் வீடு திரும்பி இருக்கிறார்கள்.

அப்போது ஜீப் அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பி நின்ற போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து மாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஜீப் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ராணி, சாந்தா, சின்னம்மா, ராபியா, லீலா, ஷாஜா ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விஷயங்களை ஒருங்கிணைத்து மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி இது குறித்து தனது எக்ஸ் வலைத்தள பதிவில், ”வயநாட்டின் மானந்தவாடியில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சோகமான ஜீப் விபத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்; மாவட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்; எனது எண்ணங்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சுற்றியே இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த சோக நிகழ்வுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தன்னுடைய இரங்கலை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com