பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களைப் பகிர்ந்த CRPF வீரர் 'மோதி ராம்'.. கைது செய்து NIA விசாரணை!
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. எனினும், தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான தகவல்களைச் சேகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவைச் சேர்ந்த சிலரே, உளவாளிகளாகச் செயல்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில், கடந்த மூன்று வாரங்களில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகத் தகவல் வெளியானது. அதில், ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மோதி ராம் ஜாட் என்ற சிஆர்பிஎஃப் வீரரை தேசிய பாதுகாப்பு அமைப்பு (NIA) கைது செய்துள்ளது. பாகிஸ்தான் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு (PIOs) இவர் ராணுவம் குறித்த முக்கிய தரவுகளை பகிர்ந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல வழிகளில் இருந்து பணம் பெற்றுள்ளார். இதை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் மோதி ராம் ஜாட்டை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் மாதம் வரை என்ஐஏ விசாரணைக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.