Wed in India - “இந்தியாவில் திருமணம் செய்யுங்கள்..” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை!

“எனது அடுத்த பணி ‘இந்தியாவில் திருமணம்’ (Wed in India) என்பது தான்” என இந்தியாவில் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் தெரிவித்துள்ளார்.
pm modi
pm modipt web

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகர் சென்ற பிரதமர் அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைத்தளத்திற்கு சென்றார். போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள பக்சி மைதானத்தில் வளர்ச்சி அடைந்த பாரதம், வளர்ச்சி அடைந்த ஜம்மு காஷ்மீர் ((Viksit Bharat Viksit Jammu Kashmir)) என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 5,000கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு ஆர்பணித்தார். சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புத்துணர்ச்சி உள்ளிட்ட ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரம்ஜான் மாதத்திற்கும் மகா சிவராத்திரி விழாவிற்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஜம்மு காஷ்மீர் மக்களை மட்டுமல்லாது மொத்த நாட்டு மக்களையும் 370 ஆவது பிரிவு குறித்து தவறாக வழிநடத்தியது. அரசமைப்பின் 370ஆவது பிரிவு 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்.

தாம் தொடங்கி வைக்கும் திட்டங்கள் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு முக்கியமானது. ஜம்மு காஷ்மீர் நாட்டின் மகுடம். வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீரை உருவாக்குவதற்கான பாதை என்பது சுற்றுலாவில் உள்ள வாய்ப்புகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆற்றல் அளித்தல் மூலம் உருவாகும். எனது அடுத்த பணி ‘இந்தியாவில் திருமணம்’ (Wed in India) என்பது தான். மக்கள் ஜம்மு காஷ்மீருக்கு வந்து தங்களது திருமணங்களை நடத்த வேண்டும். இங்கு ஜி20 மாநாடுக்கான ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டது என்பதை உலகம் பார்த்திருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கெல்லாம் சுற்றுலாவிற்காக யார் செல்வார்கள் என்று மக்கள் சொன்ன காலம் இருந்தது? ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் சுற்றுலா அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு சுற்றுலாவிற்கு வந்துள்ளார்கள்” என்றார்.

இந்தியாவில் திருமணம் செய்வது குறித்து பிரதமர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். மன்கி பாத் நிகழ்வில் இதற்கு முன் இதுகுறித்து பேசியிருந்த பிரதமர் மோடி, “திருமண சீசன்களில் சுமார் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கலாம் என வர்த்தக அமைப்புகள் மதிப்பிடுகின்றன. திருமணங்களின் போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்யும் போக்கு வளர்ந்து வருகிறது. இந்தியாவில் திருமணம் நடைபெற்றால், இந்தியப் பணம் இந்தியாவிலேயே இருக்கும். நீங்கள் விரும்பும் அமைப்பு இங்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால், நிகழ்வுகள் நடக்க நடக்க அமைப்புகளும் வளரும்” என தெரிவித்திருந்தார். இன்னும் சில நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி இதை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com