பிற மாநிலங்களிலும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!
தமிழகத்தைபோல பிற மாநிலங்களிலும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் திளைத்தனர். தலைநகர் டெல்லியில் ஏராளமானோர் உற்சாகமாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். மும்பையில் பட்டாசுகள் வெடித்து 2025 ஆம் ஆண்டினை வரவேற்ற மக்கள், தனியார் விடுதிகளில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனமாடி மகிழ்ந்தனர்.
கோவா கடற்கரை நகரில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோர் நடனமாடி மகிழ்ந்தனர். கோவாவின் முக்கிய கடற்கரைகள் மக்கள் வெள்ளத்தில் திளைத்தன.
கேரள மாநிலம் கொச்சியில் புத்தாண்டை ஒட்டி வானவேடிக்கை நடத்தப்பட்டது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்ததுடன், புத்தாண்டு வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். கேரள மாநிலம் கோவளம் கடற்கரையிலும், புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
கொல்கத்தா நகரில் நடைபெற்ற வானவேடிக்கை மக்களை பரவசப்படுத்தியது. இளைஞர்கள், இளம் பெண்கள் பாடல்களைப் பாடியும் நடனமாடியும் 2025 ஆம் ஆண்டினை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாண்டை ஒட்டி மின்னொளியில் ஜொலித்த அமிர்தசரஸ் பொற்கோயிலில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.