புற்றுநோய்க்குப் புதிய மருந்து.. 7 நிமிடங்களில் தீர்வு.. அறிமுகம் செய்த இந்தியா!
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக புதிய வகை நோய் எதிர்ப்பு மருந்தான டெசென்ட்ரிக் எனப்படும் அட்சோலிசுமாப் மருந்தை இந்தியாவின் ரோச் பார்மா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மார்பகம், நுரையீரல், இரத்தம், புரோஸ்டேட் என புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில குணப்படுத்தக் கூடியதாகவும் குணப்படுத்த முடியாததாகவும் இருக்கிறது. மேலும் புற்றுநோய்க்கு நீண்டநாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. அவற்றுக்கான செலவுகளும் அதிகரிக்கிறது. அந்த வகையில், அவற்றைக் குணப்படுத்துவதற்கு சில மருந்துகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், பல நுரையீரல் புற்றுநோயாளிகள் நோயெதிர்ப்பு சிகிச்சையைப் பெறும் முறையை மாற்றக்கூடிய ஒரு புதிய புற்றுநோய் சிகிச்சையை இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக புதிய வகை நோய் எதிர்ப்பு மருந்தான டெசென்ட்ரிக் எனப்படும் அட்சோலிசுமாப் மருந்தை இந்தியாவின் ரோச் பார்மா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது வெறும் ஏழு நிமிடங்களில் சிகிச்சையை வழங்குகிறது. இந்தப் புதிய ஊசி தோலின்கீழ் செலுத்தப்படுவதால், சிகிச்சை நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது. இந்த மருந்து பொதுவாக தொடைப் பகுதியிலும் தோலுக்கு அடியிலும் நேராக செலுத்தப்படுகிறது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மறைந்து இருக்கும் PD-L1 எனப்படும் புரதத்தை தடுக்கிறது. இதன்மூலம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் செல்கள், புற்றுநோய் செல்களை திறம்பட அடையாளம் கண்டு தாக்கி அழிக்க உதவுகிறது.
இந்த ஊசி தற்போது, இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளில் பெரும்பான்மையாக உள்ள நான்-ஸ்மால் செல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது. நோயின் நிலை, ஒட்டுமொத்த உடல்நிலை மற்றும் மருத்துவரின் பரிந்துரையைப் பொறுத்து, இந்த சிகிச்சையானது தனியாகவோ அல்லது மற்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் சேர்த்தோ பயன்படுத்தப்படலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, NSCLC நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த சிகிச்சைக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது. எனினும், இந்த ஊசியின் ஒவ்வொரு டோஸுக்கும் கிட்டத்தட்ட ரூ. 3.7 லட்சம் செலவாகிறது.
மேலும் பல நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சைத் திட்டத்தைப் பொறுத்து சுமார் ஆறு டோஸ்கள் தேவைப்படலாம். அறிக்கைகளின்படி, இந்தியாவில் நவீன நோயெதிர்ப்பு சிகிச்சைகளுக்கு, பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் சிகிச்சைத் திட்டத்தைப் பொறுத்து, ஒரு சிகிச்சைச் சுழற்சிக்கு பொதுவாக ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை செலவாகிறது. இந்த புதிய முறை சிகிச்சை நோயாளிகள் மற்றும் மருத்துவமனையின் சுமையைக் குறைக்கும் என்கிற போதிலும் இம்மருந்தின் அதிக விலை, பாமர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், புற்றுநோய் சிகிச்சையில், குறிப்பாக பொதுவான நுரையீரல் புற்றுநோயான நான்-ஸ்மால் செல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு பெரும் முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது

