மத்திய பட்ஜெட் 2026 | புற்றுநோய் சிகிச்சைக்கு சுங்க வரி நீக்கம்.. 17 மருந்துகள் எவை?
2026-27ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம் என அறிவித்தார். அந்த வகையில், சுங்க வரி, எந்தெந்த மருந்துகளுக்கு நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
மார்பகம், நுரையீரல், இரத்தம், புரோஸ்டேட் என புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில குணப்படுத்தக் கூடியதாகவும் குணப்படுத்த முடியாததாகவும் இருக்கிறது. மேலும் புற்றுநோய்க்கு நீண்டநாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. அவற்றுக்கான செலவுகளும் அதிகரிக்கிறது. அந்த வகையில், அவற்றைக் குணப்படுத்துவதற்கு சில மருந்துகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேண்டியிருக்கிறது. இப்படியான மருந்துகளுக்கு சுங்கவரி விதிக்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு, தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கப்படும் என இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரிகள் நீக்கப்படும்போது, நோயாளிகள் அதைக் குறைந்த விலையில் பெற வாய்ப்பிருக்கிறது.
மேலும் இந்த மருந்துகளுக்கான சுங்க வரியை நீக்குவதன் மூலம் அதிநவீன சிகிச்சை, செலவு குறைப்பு மற்றும் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆதரவு ஆகியவற்றை அரசாங்கம் வழங்க முடியும். அந்த வகையில், சுங்க வரி, எந்தெந்த மருந்துகளுக்கு நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இங்கு பார்ப்போம். 1. ரிபோசிக்லிப், 2.அபேமாசிக்லிப், 3. டாலிகேப்டேஜீன் ஆட்டோலூசெல், 4. ட்ரெமெலிமுமாப், 5. வெனிடோக்ளாக்ஸ், 6. செரிடினிப், 7. பிரிகாடினிப், 8. டரோலுடமைடு, 9. டோரிபலிமாப், 10. செர்ப்லுலிமாப், 11. டிஸ்லெலிசுமாப், 12. இனோடுசுமாப் ஓசோகாமைசின், 13. பொனாடினிப், 14. இப்ருதினிப், 15. டப்ராஃபெனிப், 16. டிராமெடினிப் 17. இபிலிமுமாப் உள்ளிட்ட மருந்துகளுக்கு சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளில் பெரும்பாலானவை புற்றுநோய் சிகிச்சைக்கும் பராமரிப்புக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீண்டகால புற்றுநோய் சிகிச்சைக்கு பலனளிக்கும் வகையில் இவ்வறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

