INDIA கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை; முரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி INDIA கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை சில மாநிலங்களில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
'INDIA' கூட்டணி
'INDIA' கூட்டணி புதிய தலைமுறை

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் 28 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி INDIA கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணிக் கட்சிகளின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த மாதத்தின் இறுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். மம்தாவின் கருத்துக்கு பல்வேறு கூட்டணிக்கட்சி தலைவர்களும் ஆதரவளித்ததாக செய்திகள் வெளியானது. மம்தாவின் கருத்துக்கு ஒருமித்த ஆதரவு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து பேசி இருந்த மல்லிகார்ஜுன கார்கேவும், “முதலில் வெற்றி பெற வேண்டும். வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். யார் பிரதமர் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பிரதமரைப் பற்றி பேசி என்ன பயன். முதலில் வெற்றி பெற முயற்சிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

நான்காவது ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் INDIA கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தது. காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு, மாநில கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.

Congress committee
Congress committeetwitter

இக்குழு காங்கிரஸ் தலைமையிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் இதுகுறித்து தெரிவிக்கையில், 255 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தும் என கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாக கூறியுள்ளது. மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடமளிக்கும் வகையில் காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் போட்டியிட தயாராகிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போன்ற கட்சிகளிடையே காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா, பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதிரி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த மாதம் கூட்டணி தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, மாநிலத்தில் பாஜகவை எதிர்க்கும் திறன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது என்றும் வேறு எந்த கட்சியாலும் பாஜகவை வீழ்த்த முடியாது என தெரிவித்திருந்தார். மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

இத்தகைய சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என மம்தா கூறுகிறார். அவை இரண்டு தற்போது காங்கிரஸ் வசமே உள்ளது. எங்களுக்கு அவரது ஆதரவு தேவையில்லை. தனித்து போட்டியிடும் திறன் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது” என தெரிவித்திருந்தார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கருத்து குறித்து பேசிய டிஎம்சி தலைவர் குணால் கோஷ், ஆதிர் பாஜகவை சேர்ந்தவர்போல் நடந்துகொள்கிறார். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் டிஎம்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் காங்கிரஸ் சிபிஎம் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து பூஜ்ஜியத்தையே பெற்றது. பாஜகவை எதிர்த்து போராட டிஎம்சிக்கு உதவி தேவையில்லை. ஆனால் மம்தா இண்டியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளித்து வருகிறார். காங்கிரஸ் இரட்டைவேடம் போடுகிறது” எனத் தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் காங்கிரஸ் 6 இடங்களை எதிர்ப்பார்ப்பதாகவும் குறைந்தபட்சம் 4 இடங்களையாவது பெறலாம் என்ற திட்டத்தில் காங்கிரஸ் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Delhi CM Arvind Kejriwal
Delhi CM Arvind KejriwalANI

இதுபோல் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள மாநிலங்களான டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மோதல் போக்கே இருந்து வருகிறது. இரு மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அத்தனை சுலபமாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனும், மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியுடனும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூட்டணி குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோருடன் தொகுதிப் பங்கீடு குறித்த எங்களின் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இது மிகவும் சாதகமான விவாதமாக உள்ளது. நான்கு கட்சிகளுக்குள் எந்த மோதலையும் பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com