ஒடிசா தேர்தல் தோல்வி| வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் கட்சியினர்.. விளக்கமளித்த நவீன் பட்நாயக்!

”ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது” என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்எக்ஸ் தளம்

நாடு முழுவதும் நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பரப்புரையின்போது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்திற்கும் பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவியது.

குறிப்பாக தேர்தல் பரப்புரையின்போது, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான வி.கே.பாண்டியனின் பெயர்தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. இதை நன்கு பயன்படுத்திக்கொண்ட பாஜக, ”ஒரு தமிழர் ஒடிசாவை ஆளலாமா” என விமர்சனத்தை வைத்து பரப்புரையில் ஈடுபட்டது.

மேலும், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்தும் கேள்வி எழுப்பியது. பாஜகவின் இந்த கைவந்த கலை, தேர்தலில் எதிரொலித்தது.

விகே பாண்டியன், நவீன் பட்நாயக்
விகே பாண்டியன், நவீன் பட்நாயக்pt web

நினைத்தப்படியே, பாஜக இந்தத் தேர்தலில் வெற்றிவாகை சூடி, அம்மாநிலத்தில் நீண்டகால முதல்வராக இருந்த நவீன்பட்நாயக்கின் அரியாசனத்தைத் தகர்த்தது. விரைவில் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் தோவிக்குப் பிறகு பிஜு ஜனதா தளம் கட்சிக்குள்ளேயே பிரச்னை வெடித்துள்ளதாகவும், அக்கட்சியின் தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் எனவும் பிரச்னை எழுந்திருக்கிறது.

மேலும், கடந்த சில நாட்களாக வி.கே.பாண்டியனைக் காணவில்லை எனவும் அவரைப் பற்றி எந்த தகவல்களும் இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. 24 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக், தனது பதவியை ராஜினாமா செய்தபோது, அவருக்கு நெருக்கமாக இருந்த வி.கே.பாண்டியன் ஆளுநர் மாளிகைக்குச் செல்லவில்லை. அதற்குப் பிறகும் பொதுவெளியில் அவர் யார் கண்களிலும் படவில்லை எனவும் அவரது பங்களாவும் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: லோக் சபா தேர்தல்| பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு.. தவறை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்!

நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்
ஒடிசா| மேடையில் பேசும் நவீன் பட்நாயக்.. நடுங்கும் கையை மறைக்கும் விகே பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், ”ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது” என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த நேர்காணலில், ”பாண்டியன் மீது சில விமர்சனங்கள் உள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. கட்சியில் சேர்ந்த அவர் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் எந்த தொகுதியிலும் தேர்தலில் போட்டியிடவில்லை. என் வாரிசு பற்றிக் கேட்டால் அது பாண்டியன் இல்லை என்று நான் எப்போதும் தெளிவாகச் சொல்லி வந்தேன். பிஜு ஜனதாதளம் கட்சியின் அரசியல் வாரிசு யார் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தேர்தல் தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். முடிந்தவரை மாநில மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வேன். எனது உடல்நிலை எப்போதும் நன்றாகவே உள்ளது. கடந்த மாதம் தீவிர தேர்தல் பரப்புரை செய்ததே உடல்நலக் குறைப்பாட்டுக்கு காரணமே தவிர, நான் நன்றாக இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து வி.கே.பாண்டியனுக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், நவீன் பட்நாயக் பேட்டியளித்திருப்பது வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: மோடி பதவியேற்பு| மாலத்தீவு அதிபருக்கு அழைப்பு.. முதல்முறையாக இந்தியா வரும் முகம்மது முய்சு!

நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்
ஒடிசா| ஆட்சியை இழக்கிறாரா நவீன் பட்நாயக்.. அரியணை ஏற தயாராகும் பாஜக! 70 இடங்களுக்கு மேல் முன்னிலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com