மொத்த இந்தியாவுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! எதற்காக இந்த Red Alert? திணறப்போகிறதா நாடு?
இந்தியாவின் ஜூலை பொருளாதார ஆய்வறிக்கை, தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் மேற்கு ஆசிய புவிசார் பதற்றம் காரணமாக நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு கடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறது. 85% எண்ணெய் இறக்குமதியால் நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, பணவீக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகலாம். எல் நினோ அபாயமும் வேளாண்மை, உணவுவிலை, கிராமப்புற நுகர்வை பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஜூலை மாத பொருளாதார ஆய்வறிக்கையில், தொடர்ந்து அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றம், குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் உருவாகும் நிச்சயமற்ற சூழல், வர்த்தகப் பாதைகள், சரக்கு விலைகள் மற்றும் முதலீட்டு ஓட்டங்களை பாதித்து பொருளாதாரத்திற்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறிக்கை கூறுகிறது.
இந்தியா பயன்படுத்தும் கச்சா எண்ணெயில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. எனவே, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் மீண்டும் உயர்ந்தால், இறக்குமதி செலவு அதிகரித்து, பணவீக்கம் மற்றும் அரசின் நிதிச் சுமை உயரக்கூடும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எரிபொருள் வரியை குறைப்பதோ அல்லது மானியத்தை உயர்த்துவதோ அரசின் நிதிப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கலாம்.
மேலும், எல் நினோ காலநிலை உருவாகும் வாய்ப்பும் பொருளாதாரத்திற்கு மற்றொரு அபாயமாகக் கருதப்பட்டுள்ளது. இது வேளாண் உற்பத்தி, உணவுப் பொருட்களின் விலை மற்றும் கிராமப்புற நுகர்வை பாதிக்கக்கூடும். இருப்பினும், போதிய உணவுத் தானிய இருப்பு, நீர்நிலைகளில் போதுமான நீர் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஓரளவு பாதுகாப்பை வழங்கும் என அறிக்கை தெரிவித்துள்ளது. அதேவேளையில், நடுத்தர கால வளர்ச்சியில் இந்தியா வலுவான முன்னேற்றத்தைத் தொடரும் என்ற நம்பிக்கையையும் நிதியமைச்சகம் வெளிப்படுத்தியுள்ளது.

