ஒடிசா|கவிழ்ந்த வேகப்படகு... நூலிழையில் உயிர்தப்பிய கங்குலியின் சகோதர்!
ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி ஆகியோர் வேகப்படகில் சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. இதனால் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.
ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அர்பிதா உட்பட கடலில் தத்தளித்த அனைவரையும் மீட்புப்படையினர் உடனடியாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். உடனடியாக அங்கிருந்த லைஃப் கார்டுகள் விரைந்து செயல்பட்டு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஸ்னேஹாசிஷ் மற்றும் அர்பிதா உட்பட அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.
இதனால், அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சனிக்கிழமை மாலை பூரி கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட இந்த அனுபவம் குறித்து அர்பிதா கங்குலி கூறுகையில், "கடவுளின் அருளால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. கடல் சாகச விளையாட்டுகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
அர்ப்பிதா கங்குலி மேலும் கூறுகையில், "கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. 10 பேர் அமரக்கூடிய படகில், பண ஆசையில் வெறும் மூன்று அல்லது நான்கு பேரை மட்டுமே அனுமதித்திருந்தனர். இதனால் படகு எடை குறைவாக இருந்ததால், சமநிலை தவறி கவிழ்ந்துவிட்டது. லைஃப் கார்டுகள் விரைந்து வராதிருந்தால், நாங்கள் உயிருடன் இருந்திருக்க மாட்டோம்" என்று வேதனை தெரிவித்தார்.