சென்னை | "இப்படியெல்லாம் கூட நடக்குமா" ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை முயற்சி.. 3 பேர் கைது!
சென்னை திருவான்மியூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், ஏடிஎம் கார்டை செலுத்தி பணம் எடுக்க முயன்றார். கடவுச் சொல் அனைத்தையும் போட்ட பின்னரும் பணம் வராததால், இயந்திரக் கோளாறு என நினைத்து, ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து, வங்கி கிளைக்கு எச்சரிக்கை வந்துள்ளது. திருவான்மியூர் ஏடிஎம்-இல் சிலர் இயந்திர கோளாறு ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடைக்க, வங்கியின் தொழில்நுட்ப பிரிவினர் சோதனை செய்தபோதுதான், அந்த நூதன கொள்ளை முயற்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல் துறை உதவியுடன் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளை கும்பலைச் சேர்ந்த 2 பேர், நின்று நிதானமாக ஏடிஎம் இயந்திரத்தை கள்ளச் சாவி போட்டு திறந்து, பணம் வெளியே வரும் பகுதியில் கருப்பு அட்டையை ஒட்டிவிட்டு சென்றது பதிவாகி இருந்தது.
கொள்ளையர்கள் ஒட்டிய கருப்பு அட்டையால், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வருவது தடுக்கப்பட்டு, இயந்திரத்திலேயே இருக்கும். வாடிக்கையாளர்களும் இயந்திரக் கோளாறு என நினைத்து சென்றுவிடுவர். பின்னர் இயந்திரத்தை திறந்து பணத்தை கொள்ளையடித்துச் செல்வதை கொள்ளையர்கள் வாடிக்கையாக கொண்டிருந்தனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வார இறுதி நாட்களில், இதுபோல் நூதன முறையில் கொள்ளையடித்துவிட்டு, ஓலா, உபரில் கார் புக் செய்து, ரயில் நிலையங்களுக்கு சென்று, உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் செல்வதை கொள்ளை கும்பல் வாடிக்கையாக கொண்டு இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிஜ்பான், சுமித் யாதவ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.