நாக்பூர் |மதுபோதையில் வந்த ராணுவ அதிகாரி.. 30 பேர் மீது மோதிய கொடூரம்! என்ன நடந்தது?
சீ. பிரேம்குமார்
மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று (3.8.2025) இரவு 8.30 மணியளவில் ராணுவ அதிகாரி ஒருவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது தீடீரென அவர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழக்கவே, அங்கிருந்த பொதுமக்கள் 30 பேரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த பயங்கர விபத்தால் கவிழ்ந்த கார், அங்கிருந்த வடிகாலில் போய் விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த அங்கிருந்த உள்ளூர்வாசிகள் வடிகாலில் விழுந்த அந்த ராணுவ அதிகாரியை வெளியே இழுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ராம்டெக் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய ராணுவ அதிகாரியை உடனடியாக கைது செய்தனர்.
பின்னர், இந்த விபத்து குறித்து தெரிவித்த காவல்துறையினர் அதிகாரிகள், மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய நபர் ஹர்ஷ்பால் மகாதேவ் வாக்மரே (40) என்றும், இவர் அசாமில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 4 நாள் விடுமுறையில் நாகர்தானில் உள்ள துர்கா சௌக் வழியாக ஹம்லாபுரிக்கு இந்த அதிகாரி சென்று கொண்டுந்த போது, மதுபோதையில் காரை இயக்கியதால் விபத்து நடந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய ராணுவ அதிகாரி வாக்மரேவை கைது செய்த காவல்துறையினர், பொதுமக்களின் தாக்குதலால் ரத்த காயம் அடைந்திருந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அழைத்துச்சென்றனர்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய ராணுவ அதிகாரி, அங்கிருந்த பொதுமக்கள் 30 பேர் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.