\
Naga people emotional as ancestors return home after 100 long years!
Naga tribesReuters

100 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய முன்னோர்கள்! நெகிழ்ச்சியில் நாகா மக்கள்!

சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நாகா பழங்குடியின மக்களின் மூதாதையர்களின் உடல் எச்சங்கள் இங்கிலாந்தில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளன.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வரலாற்றுப் பொருட்களும், கலாசார அடையாளங்களும் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் பல இன்றளவும் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நாகா பழங்குடியின மக்களின் மூதாதையர்களின் உடல் எச்சங்கள் இங்கிலாந்தில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அப்படி என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்...

ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரலாற்றுப் பொருட்கள், சிலைகள், கலைப்பொருட்கள் மற்றும் மனித உடல் எச்சங்கள் உள்ளிட்டவை இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

naga tribes
naga tribesreuters

அந்த வகையில், வடகிழக்கு இந்தியாவில் உள்ள நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நாகா பழங்குடியின மக்களின் மூதாதையர்களின் உடல் எச்சங்களும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Pitt Rivers Museum-க்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Pitt Rivers Museum-ல் நாகா இன மக்களின் கலாசாரத்துடன் தொடர்புடைய 6,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. உலகிலேயே நாகா கலாசாரத்தைச் சேர்ந்த பொருட்களின் மிகப்பெரிய சேகரிப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும், இந்த அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் 219 மனித உடல் எச்சங்கள் குறித்த பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தங்களது முன்னோர்களின் உடல் எச்சங்களை மீண்டும் தாயகத்துக்குக் கொண்டுவர வேண்டும் என நாகா இன மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இத்தகைய சூழலில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரில் உள்ள Pitt Rivers Museum-ல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நாகாலாந்தில் இருந்து சுமார் 30 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இங்கிலாந்துக்குச் சென்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில், 39 மூதாதையர்களின் உடல் எச்சங்கள் நாகா பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.இவ்வாறு மீண்டும் கொண்டுவரப்பட்ட 39 உடல் எச்சங்களையும் நாகாலாந்தின் தலைநகரான கோஹிமாவில் உள்ள Naga Solidarity Park பகுதியில் ஒரே நினைவிடத்தின் கீழ் அடக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடம் நாகா இன மக்களின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் தங்களது முன்னோர்களுக்கு அவர்கள் செலுத்தும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

naga tribes
naga tribesreuters

பல தலைமுறைகளாகத் தங்களது மண்ணிலிருந்து பிரிக்கப்பட்டிருந்த முன்னோர்களின் உடல் எச்சங்கள் மீண்டும் தாயகம் திரும்பியிருப்பது நாகா மக்களுக்கு மிகுந்த உணர்வுபூர்வமான தருணமாகப் பார்க்கப்படுகிறது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய அடையாளங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களையும் மீண்டும் அவர்களது சமூகத்திடம் ஒப்படைக்கும் முயற்சிகளில் இந்த நிகழ்வும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

Naga people emotional as ancestors return home after 100 long years!
லாகூரில் அதிகரித்த காற்று மாசு.. இந்திய நகரங்களே காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு?