மும்பை: கோல்ட்ப்ளே நிகழ்ச்சியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' போஸ்டர்... வினவிய கிறிஸ் மார்ட்டின்!
மும்பையில் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் "ஜெய்ஸ்ரீராம்” முழக்கம்
பிரிட்டிஷ் ராக் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ் வேர்ல்ட் டூர்' (Music of the Spheres World Tour) நிகழ்ச்சியின் ஒரு பகுதி ஜனவரி 18, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நவி மும்பையில் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கிருக்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் அனைத்தும் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றன.
அரங்கிற்கு அருகிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களின் ரூம்கள் அனைத்தும் முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டதுடன், ஹோட்டல்களில் உள்ள அறைகளின் விலையானது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியானது ஹாட்ஸ்டாரில் நேரிடையாக ஒளிபரப்பப்படுகிறது. தொடக்க நாளான நேற்றைய தினம், இந்த இசைக்குழுவின் தலைவரான கிறிஸ் மார்ட்டின் , பார்வையாளர்களை இந்தியில் வாழ்த்தினார். மேலும் ”சுக்ரியா” என்று தனது நன்றியைத் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அத்துடன் கிறிஸ் மார்ட்டின் ரசிகர்கள் வைத்திருந்த பிளக்ஸ் கார்டுகளைப் படித்துவிட்டு “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூறியதுடன் அதற்கான பொருள் என்ன என்றும் விசாரித்தார். இந்த காணொளியானது வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக தனது காதலி டகோட்டா ஜான்சனுடன் இந்தியா வந்த கிறிஸ் மார்ட்டின் மும்பை பயணத்தின் போது கோயில்களுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. நவி மும்பையில் நேற்று (ஜன 18) முதல் நாளை மறுநாள் (ஜன 21 ம் தேதி) வரை Coldplay கலைநிகழ்ச்சியானது நடைபெறுகிறது. தொடர்ந்து ஜனவரி 25 மற்றும் 26ல் அகமதாபாத்தில் இதே நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.