coldplay கலைநிகழ்ச்சி எதிரொலி |மும்பை ஹோட்டல்களில் நாள் ஒன்றுக்கு ரூ. 80,000 தாண்டி வாடகை!
மும்பையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ராக் இசைக்குழுவின் coldplay கலை நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே அனைத்து விடுதிகளும் ஹோட்டல் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டதுடன், அறையின் ஒருநாள் வாடகை 80,000யும் தாண்டி விற்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ராக் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ் வேர்ல்ட் டூர்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 18, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நவி மும்பையில் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைப்பெற இருப்பதால், ரசிகர்களால் அங்கு இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
அரங்கிற்கு அருகிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களின் ரூம்கள் அனைத்தும் முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டதுடன், ஹோட்டல்களில் உள்ள அறைகளின் விலையானது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
MakeMyTrip இன் பட்டியல்களின்படி நெருலில் மைதானத்திற்கு அருகில் உள்ள கோர்ட்யார்ட் பை மேரியட் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனவரி 19 தேதி மட்டும் மும்பையில் உள்ள ஹோட்டலின் அறைகள் ஒரு இரவுக்கு ரூ. 50,000 வசூலிக்கப்படுகிறது. மேலும் ராடிசன்,ஃபெர்ன் ரெசிடென்சி போன்ற ஹோட்டல்களின் அறைகள் ஒரு இரவுக்கு ரூ.20,000 ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தவிர, அகோடாவில், மாரியட்டின் கோர்ட்யார்டில் டபுள் பெட்ரூம் ரூ. 88,000 க்கு, அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சி நடைபெற இருக்கும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாந்த்ராவில் கூட, தாஜ் லேண்ட்ஸ் எண்டில் உள்ள அரைகள் ஒரு இரவுக்கு கிட்டத்தட்ட 30,000 ரூபாய் என்று வசூலிக்கப்படுகிறது.
முன்னதாக, செப்டம்பர் 2024 இல் இசைக்குழுவின் இந்திய சுற்றுப்பயணத்தின் அறிவிப்பு வெளிவந்ததும், புக்மைஷோவில் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சேரிகளில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வருகை தருவதால், நவி மும்பையில் பரபரப்பு நிலவுகிறது. தங்குமிடங்கள் இல்லாத ரசிகர்களுக்கு ஹோட்டல்களில் ஒரு அறையைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.