
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் செப் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் அது நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாள் (நேற்று), பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டம் நடந்த நிலையில் இன்றுமுதல் அடுத்தடுத்த நாட்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவரான குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கும் மேடையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுகளுக்கு முன் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்த பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அணிதிரண்டு சென்றனர். இதனை அடுத்து மக்களவை அமர்வு 1.15 மணியளவிலும் மாநிலங்களவை அமர்வு 2.45 மணியளவிலும் தொடங்கி நடைபெற்றது.