ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருக்கு பாட்டு பாடி சாலை விதிகளை நினைவூட்டிய காவலர்.. வைரலாகும் வீடியோ..!
மத்திய பிரதேசத்தில் பகவத் பிரசாத் பாண்டே என்ற காவலர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை தனது பாடல் மூலம் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன் பக்க கண்ணாடி இல்லாமல் வாகனத்தை இயக்கிய அந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை மடக்கிய காவலர் பகவத் பிரசாத், இந்த மாதத்தில் மட்டும் நீங்கள் மூன்றாவது முறையாக இது போன்று என்னிடம் மாட்டுகிறீர்கள், எப்போது ஆட்டோவின் கண்ணாடியை சரி செய்வீர்கள் என்பதை பாடல் மூலமாக பாட்டு பாடி கேட்டார்.
காவலர், ஹிந்தி திரைப்படம் பர்சாத்ல் வரும் ஹம்கோ சிர்ஃப் தும்சே பியார் ஹை பாடலை அடிப்படையாகக் கொண்ட பாடல் வரிகளைப் பயன்படுத்தி, ஓட்டுநருக்கு ஏற்கனவே எச்சரித்ததை நினைவூட்டினார்.
இப்படி பாடலின் வரிகளை மாற்றி, வாகனத்தை கண்ணாடி இல்லாமல் ஓட்டுவது தவறு என்று உணர்த்தியுள்ளார். மேலும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த சம்பவம், விதிகளை மீறுபவர்களை வித்தியாசமான முறையில் அணுகுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலையில் தான் செய்தது தவறு என்று உணர்ந்த ஓட்டுநர் வெட்கத்துடன் சிரித்தார். அவரது வாகனத்திற்கு சரியான கண்ணாடி இல்லை, முன்பக்கத்தை ஒரு தெளிவான பிளாஸ்டிக் தாள் மட்டுமே மூடியிருந்தது.
இந்த வீடியோ காவலர் பகவத் பிரசாத் பாண்டேவின் சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அப்படி வெளியிடப்பட்ட சில மணி நேரத்திலேயே இந்த வீடியோ 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது மற்றும் வைரலாகி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது..
அத்துடன் இன்னொரு வீடியோவையும் பாண்டே வெளியிட்டுருந்தார்.. அதில் மீண்டும் அந்த ஓட்டுநரை நகைச்சுவையாக திட்டியுள்ளார்.. போலி வெகுமதியாக ஒரு மாலையையும் பரிசாக கொடுத்தார். "இந்த மனிதர் கண்ணாடியைப் பெற குவாலியருக்குச் செல்ல முடியவில்லை. குவாலியர் 120 கி.மீ தொலைவில் உள்ளது," என்று அவர் கூறினார்.
மேலும் அவர்,” பிளாஸ்டிக் தாளை கண்ணாடியில் பயன்படுத்துகிறார். இதுபோன்ற பிளாஸ்டிக் தாள் ஹேக்குகளைப் பயன்படுத்துவதை நீங்கள் அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மழை பெய்யும்போது, வாகனம் ஓட்டுவது கடினமாகிவிடும்" என்றும் காவலர் கூறினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவலரின் இந்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பலர், இது போன்ற அணுகுமுறைகள் மூலம் போக்குவரத்து விதிகளை எளிதாகப் புரிய வைக்க முடியும் என்று கருதுகின்றனர். அத்துடன் போக்குவரத்து விதிமீறல்களைக் கையாளும் பாண்டேவின் தனித்துவமான மற்றும் கனிவான முறையையும், அவரது அழகான பாடலையும் மக்கள் விரும்பியதாக பதிவிட்டு வருகின்றனர்..